பொருட்பால் - அறிவுடைமை

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share

1. அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்.

விளக்கம் : பகையால் அழிவு வாராமல் பாதுகாக்கும் அரண், அறிவு ஒன்றுதான்.

2. சென்ற இடத்தாற் செலவிடா தீதொரீஇ
நன்றின்பா லுய்ப்ப தறிவு.

விளக்கம் : மனம் போகும் வழியெல்லாம் போக விடாமல் தீய வழிகளைத் தள்ளிவிட்டு, நல்வழியைத் தேர்வு செய்வதே அறிவுடைமையாகும்.

3. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

விளக்கம் : எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்.

4. எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு.

விளக்கம் : நாம் சொல்ல வேண்டியவைகளை எளிய முறையில் கேட்போரின் இதயத்தில் பதியுமாறு சொல்லிப் பிறர் சொல்லும் நுட்பமான கருத்துக்களையும் ஆராய்ந்து தெளிவதே அறிவுடைமையாகும்.

5. உலகந் தழீஇய தொட்பம் மலர்தலுங்
கூம்பலு மில்ல தறிவு.

விளக்கம் : உயர்ந்தோரே உலகோர் எனப்படுவதால் அவர்களுடன் நட்பு கொண்டு இன்பம் துன்பம் ஆகிய இரண்டையும் ஒரே நிலையாகக் கருதுவதே அறிவுடைமையாகும்.

6. எவ்வ துறைவ துலக முலகத்தோ
டவ்வ துறைவ தறிவு.

விளக்கம் : உயர்ந்தோர் வழியில் உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ அதற்கேற்ப நடந்து கொள்வதே அறிவாகும்.

7. அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்.

விளக்கம் : ஒரு விளைவுக்கு எதிர் விளைவு எப்படியிருக்குமென அறிவுடையவர்கள்தான் சிந்திப்பார்கள்; அறிவில்லாதவர்கள் சிந்திக்க மாட்டார்கள்.

8. அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவ
தஞ்சல் அறிவார் தொழில்.

விளக்கம் : அறிவில்லாதவர்கள்தான் அஞ்ச வேண்டியதற்கு அஞ்ச மாட்டார்கள் அறிஞர்கள் மட்டுமே அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவார்கள்.

9. எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்.

விளக்கம் : வருமுன் அறிந்து காத்துக்கொள்ளும் திறனுடையவர்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய துன்பம் ஏற்படாது.

10. அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனு மிலர்.

விளக்கம் : அறிவு இல்லாதவர்களுக்கு வேறு எது இருந்தாலும் பெருமையில்லை; அறிவு உள்ளவர்களுக்கு வேறு எது இல்லாவிட்டாலும் சிறுமை இல்லை.

1

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share