அறத்துப்பால் - அவா அறுத்தல்

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share

1. அவாவென்ப எல்லா உயிர்க்குமெஞ் ஞான்றுந்
தவாஅப் பிறப்பீனும் வித்து.

விளக்கம் : ஆசையை, எல்லா உயிர்களிடமும், எல்லாக் காலத்திலும் தவறாமல் தோன்றி முளைக்கும் விதை என்று கூறலாம்.

2. வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.

விளக்கம் : விரும்புவதானால் பிறக்காமலே இருந்திருக்கவேண்டும் என்று ஒருவன் எண்ணுகிற அளவுக்கு ஏற்படுகிற துன்ப நிலை, ஆசைகளை ஒழிக்காவிடில் வரும்.

3. வேண்டாமை யன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
ஆண்டும் அஃதொப்ப தில்.

விளக்கம் : தீமை விளைவிக்கும் ஆசைகளை வேண்டாம் என்று புறக்கணிப்பதைப் போன்ற செல்வம் இங்கு எதுவுமில்லை; வேறு எங்கும் கூட அத்தகைய ஒப்பற்ற செல்வம் இல்லையென்றே கூறலாம்.

4. தூஉய்மை யென்ப தவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்.

விளக்கம் : தூய்மை என்பது பேராசையற்ற தன்மையாகும் அத்தூய்மை வாய்மையை நாடுவோர்க்கே வாய்க்கும்.

5. அற்றவ ரென்பார் அவாவற்றார் மற்றையார்
அற்றாக அற்ற திலர்.

விளக்கம் : ஆசையனைத்தும் விட்டவரே துறவி எனப்படுவார் முற்றும் துறவாதவர், தூய துறவியாக மாட்டார்.

6. அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
வஞ்சிப்ப தோரும் அவா.

விளக்கம் : ஒருவரை வஞ்சித்துக் கெடுப்பதற்குக் காரணமாக இருப்பது ஆசையேயாகும் எனவே, ஆசைக்கு அடிமையாகக் கூடாது என்ற அச்சத்துடன் வாழ வேண்டும்.

7. அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும்.

விளக்கம் : கெடாமல் வாழ்வதற்குரிய நிலை, ஒருவன் விரும்புமாறு வாய்ப்பதற்கு, அவன் பேராசைக் குணத்தை முற்றிலும் ஒழித்தவனாக இருக்க வேண்டும்.

8. அவாவில்லார்க் கில்லாகுந் துன்பமஃ துண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்.

விளக்கம் : ஆசை இல்லாதவர்களுக்குத் துன்பம் இல்லை ஆசை உண்டானால், அதைத் தொடர்ந்து துன்பமும் மேலும் மேலும் வந்து கொண்டிருக்கும்

9. இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னுந்
துன்பத்துள் துன்பங் கெடின்.

விளக்கம் : பெருந்துன்பம் தரக்கூடிய பேராசை ஒழிந்தால் வாழ்வில் இன்பம் விடாமல் தொடரும்.

10. ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்.

விளக்கம் : இயல்பாகவே எழும் அடங்காத பேராசையை அகற்றி வாழும் நிலை, நீங்காத இன்பத்தை இயல்பாகவே தரக்கூடியதாகும்.

1

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share