அறத்துப்பால் - இன்னா செய்யாமை

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share

1. சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா
செய்யாமை மாசற்றார் கோள்

விளக்கம் : சிறப்பைத்தருகின்ற பெருஞ் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும், பிறர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாம்.

2. கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்

விளக்கம் : ஒருவன் கறுவுகொண்டு துன்பம் செய்த போதிலும் அவனுக்கு திரும்ப துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாகும்.

3. செய்யாமற் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமந் தரும்

விளக்கம் : தான் ஒன்றும் செய்யாதிருக்கத் தனக்குத் தீங்கு செய்தவர்க்கும் துன்பமானாவற்றைச் செய்தால் செய்தபிறகு தப்பமுடியாத துன்பத்தையே கொடுக்கும்.

4. இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்

விளக்கம் : இன்னா செய்தவரைத் தண்டித்தல் அவரே நாணும் படியாக அவருக்கு நல்லுதவி செய்து அவருடைய தீமையையும் நன்மையையும் மறந்து விடுதலாகும்.

5. அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போற் போற்றாக் கடை

விளக்கம் : மற்ற உயிரின் துன்பத்தை தன் துன்பம் போல் கருதிக் காப்பாற்றா விட்டால் பெற்றுள்ள அறிவினால் ஆகும் பயன் உண்டோ.

6. இன்னா எனத்தா னுணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கட் செயல்

விளக்கம் : ஒருவன் துன்பமானவை என்று தன் வாழ்க்கையில் கண்டு உணர்ந்தவைகளை மற்றவனிடத்தில் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.

7. எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை

விளக்கம் : எவ்வளவு சிறியதாயினும் எக்காலத்திலும் எவரிடத்திலும் மனதால் எண்ணி உண்டாகின்ற துன்பச்செயலைச் செய்யாதிருத்தலே நல்லது.

8. தன்னுயிர்க் கின்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க் கின்னா செயல்

விளக்கம் : தன் உயிருக்குத் துன்பமானவை இவை என்று உணர்ந்தவன், அத் துன்பத்தை மற்ற உயிருக்குச் செய்தல் என்ன காரணத்தாலோ.

9. பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்

விளக்கம் : முற்பகலில் மற்றவருக்கு துன்பமானவற்றைச் செய்தால் அவ்வாறு செய்தவர்க்கே பிற்பகலில் துன்பங்கள் தாமாக வந்து சேரும்.

10. நோயெல்லா நோய்செய்தார் மேலவா நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்

விளக்கம் : துன்பம் எல்லாம் துன்பம் செய்தவரையேச் சார்வன, ஆகையால் துன்பம் இல்லாமல் வாழ்தலை விரும்புகின்றவர் பிறர்க்கு துன்பம் செய்யார்.

1

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share