அறத்துப்பால் - ஈகை

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share

1. வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.

விளக்கம் : வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது, மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயன் எதிர்பார்த்து கொடுக்கும் தன்மை உடையது.

2. நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று.

விளக்கம் : பிறரிடம் பொருள் பெற்றுக் கொள்ளுதல் நல்ல நெறி என்றாலும் கொள்ளல் தீமையானது, மேலுலகம் இல்லை என்றாலும் பிறக்குக் கொடுப்பதே சிறந்தது.

3. இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள.

விளக்கம் : யான் வறியவன் என்னும் துன்பச் சொல்லை ஒருவன் உரைப்பதற்கு முன் அவனுக்கு கொடுக்கும் தன்மை, நல்ல குடி பிறப்பு உடையவனிடம் உண்டு.

4. இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணும் அளவு.

விளக்கம் : பொருள் வேண்டும் என்ற இரந்தவரின் மகிழ்ந்த முகத்தைக் காணும் வரைக்கும் (இரத்தலைப் போலவே ) இரந்து கேட்கப்படுவதும் துன்பமானது.

5. ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.

விளக்கம் : தவ வலிமை உடையவரின் வலிமை பசியை பொறுத்துக் கொள்ளலாகும், அதுவும் அப் பசியை உணவு கொடுத்து மாற்றுகின்றவரின் ஆற்றலுக்குப் பிற்பட்டதாகும்.

6. அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.

விளக்கம் : வறியவரின் கடும்பசியைத் தீர்க்க வேண்டும் அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப் பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.

7. பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது.

விளக்கம் : தான் பெற்ற உணவை பலரோடும் பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவனை பசி என்று கூறப்படும் தீயநோய் அணுகுதல் இல்லை.

8. ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்.

விளக்கம் : தாம் சேர்த்து வைத்துள்ள பொருளைப் பிறருக்குக் கொடுக்காமல் வைத்திருந்து பின் இழந்து விடும் வன் கண்மை உடையவர், பிறர்க்கு கொடுத்து மகிழும் மகிழ்ச்சியை அறியாரோ.

9. இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்.

விளக்கம் : பொருளின் குறைபாட்டை நிரப்புவதற்க்காக உள்ளதைப் பிறர்க்கு ஈயாமல் தாமே தமியராய் உண்பது வறுமையால் இறப்பதை விடத் துன்பமானது.

10. சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை.

விளக்கம் : சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்.

1

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share