1. அரங்குஇன்றி வட்டாடி அற்றே நிரம்பிய
நூல்இன்றிக் கோட்டி கொளல்.
விளக்கம் : நிரம்பிய நூலறிவு இல்லாமல் கற்றவர் அவையிலே சென்று ஒருவன் பேசுதல், அரங்கம் இழைக்காமலே வட்டாடினால் போன்ற அறியாமையான செயல் ஆகும்.
2. கல்லாதான் சொற்கா முறுதல் முலைஇரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று.
விளக்கம் : கல்லாதவன், தானும் அவையிற் பேசவேண்டும் என்று விரும்புதல், முலைகளிரண்டும் இல்லாதவளான பெண் பெண்மையை விரும்புதல் போன்ற அறியாமை ஆகும்.
3. கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்.
விளக்கம் : கற்றவர்களின் முன்பாகச் சென்று சொல்லாடாதிருந்தால், கல்லாதவர்களும், அந்த அளவுக்கு மிகவும் நல்லவர்களாகவே கற்றவரால் கருதப்படுவர்.
4. கல்லாதான் ஒட்பம் கழியநன்று ஆயினும்
கொள்ளார் அறிவுடை யார்.
விளக்கம் : கல்லாதவனது அறிவு சில சமயங்களிலே மிகவும் நன்றாயிருந்தாலும், அறிவுடையவர்கள் அதனை நன்றென்று ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
5. கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்.
விளக்கம் : கல்லாத ஒருவன், தன்னையும் கற்றவர்போல மதித்துக் கொண்டு சொல்லாடினால், அவனுக்கு இயல்பாக உள்ள மதிப்பும் கெட்டுப் போய்விடும்.
6. உளர்என்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களர்அனையர் கல்லா தவர்.
விளக்கம் : உயிரோடு இருக்கின்றார் என்னும் அளவினரே அல்லாமல், எந்தப் பயனும் இல்லாத களர்நிலத்தைப் போன்றவர்களே கல்லாதவர் ஆவர்.
7. நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்பாண் புனைபாவை அற்று.
விளக்கம் : நுட்பமாகவும் சிறப்பாகவும் நுழைந்து கற்ற அறிவுநலம் இல்லாதவனின் உடல் அழகு, மண்ணால் அழகாகச் செய்த ஒரு பாவையின் உடல் அழகு போன்றதே
8. நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு.
விளக்கம் : கல்வியறிவு உடைய நல்லவரிடம் உள்ளதான வறுமையை விடக் கல்லாதவரிடம் சேர்ந்த அளவற்ற செல்வமானது பெரிதும் துன்பம் தருவதாகும்.
9. மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்துஇலர் பாடு.
விளக்கம் : மேலான குடியிலே பிறந்தவராயினும், கல்லாத மடமையாளர், தாழ்ந்த குடியிலே பிறந்தும் கற்றவரைப் போலப் பெருமை இல்லாதவர் ஆவர்.
10. விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்.
விளக்கம் : அறிவு விளங்கும் நூல்களைக் கல்லாதவர்கள், மக்களை நோக்க விலங்குகள் இழிந்தவை ஆவதுபோல, கற்றவரைக் கருதத் தாமும் இழிந்தவர் ஆவர்.
1