அறத்துப்பால் - கள்ளாமை

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share

1. எள்ளாமை வேண்டுவா னென்பான் எனைத்தொன்றுங்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு.

விளக்கம் : எந்தப் பொருளையும் களவாடும் நினைவு தன் நெஞ்சை அணுகாமல் பார்த்துக் (காத்துக்) கொள்பவனே இகழ்ச்சிக்கு ஆட்படாமல் வாழ முடியும்.

2. உள்ளத்தால் உள்ளலுந் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வே மெனல்.

விளக்கம் : பிறருக்குரிய பொருளைச் சூழ்ச்சியினால் கவர்ந்து கொள்ளலாமா என்று ஒருவன் நினைப்பதேகூடக் குற்றமாகும்.

3. களவினா லாகிய ஆக்கம் அளவிறந்
தாவது போலக் கெடும்.

விளக்கம் : கொள்ளயடித்துப் பொருள் குவிப்பது, முதலில் பெரிதாகத் தோன்றினாலும், அந்தச் செயல் ஏற்கனவே இருந்த செல்வத்தையும் அடித்து கொண்டு போய்விடும்.

4. களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமந் தரும்.

விளக்கம் : களவு செய்வதில் ஒருவனுக்கு ஏற்படும் தணியாத தாகம், அதனால் உருவாகும் விளைவுகளால் தீராத துன்பத்தை உண்டாக்கும்.

5. அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்க ணில்.

விளக்கம் : மறந்திருக்கும் நேரம் பார்த்துப் பிறர் பொருளைக் களவாட எண்ணுபவரிடத்தில், அருள் கருதி அன்பாக நடக்கும் பண்பு இருக்காது.

6. அளவின்கண் நின்றொழுக லாற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்.

விளக்கம் : ஓர் எல்லைக்குட்பட்டு வாழ்வைச் செம்மையாக அமைத்துக் கொள்ளாதவர்கள், களவு செய்து பிறர் பொருளைக் கொள்வதில் நாட்டமுடையவராவார்கள்.

7. களவென்னுங் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்க ணில்.

விளக்கம் : அளவறிந்து வாழ்க்கை நடத்துகிற ஆற்றலுடையவர்களிடம், களவாடுதல் எனும் சூதுமதி கிடையாது.

8. அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்குங்
களவறிந்தார் நெஞ்சில் கரவு.

விளக்கம் : நேர்மையுள்ளவர் நெஞ்சம் அறவழியில் செல்லும்; கொள்ளையடிப்போர் நெஞ்சமோ குறுக்குவழியான வஞ்சக வழியில் செல்லும்.

9. அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்.

விளக்கம் : அளவு என்பதைத் தவிர வேறு நல்வழிகளை நாடாதவர்கள், வரம்பு கடந்த செயல்களால் வாழ்விழந்து வீழ்வார்கள்.

10. கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தே ளுலகு.

விளக்கம் : களவாடுபவர்க்கு உயிர் வாழ்வதேகூடத் தவறிப்போகும்; களவை நினைத்தும் பார்க்காதவர்க்கோ, புகழுலக வாழ்க்கை தவறவே தவறாது.

1

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share