பொருட்பால் - குற்றங்கடிதல்

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share

1. செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து.

விளக்கம் : செருக்கும் சினமும் காமமும் ஆகிய இந்தக் குற்றங்கள் இல்லாதவனுடைய வாழ்வில் காணும் பெருக்கம் மேம்பாடு உடையதாகும்.

2. இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு.

விளக்கம் : பொருள் கொடாத தன்மையும் மாட்சியில்லாத மானமும், தகுதியற்ற மகிழ்ச்சியும் தலைவனாக இருப்பனுக்கு குற்றங்களாகும்.

3. தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்.

விளக்கம் : பழி நாணுகின்ற பெருமக்கள் தினையளவாகிய சிறு குற்றம் நேர்ந்தாலும் அதை பனையளவாகக் கருதிக் (குற்றம் செய்யாமல்) காத்துக் கொள்வர்.

4. குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் த்ரூஉம் பகை.

விளக்கம் : குற்றமே ஒருவனுக்கு அழிவை உண்டாக்கும் பகையாகும், ஆகையால் குற்றம் செய்யாமல் இருப்பதே நோக்கமாகக் கொண்டு காத்துக் கொள்ள வேண்டும்.

5. வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.

விளக்கம் : குற்றம் நேர்வதற்கு முன்னமே வராமல் காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை, நெருப்பின் முன் நின்ற வைக்கோல் போர் போல் அழிந்துவிடும்.

6. தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு.

விளக்கம் : முன்னே தன் குற்றத்தைக் கண்டு நீக்கி பிறகு பிறருடையக் குற்றத்தை ஆராயவல்லவனானால், தலைவனுக்கு என்ன குற்றமாகும்.

7. செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்.

விளக்கம் : செய்யத்தக்க நன்மைகளைச் செய்யாமல் பொருளைச் சேர்த்து வைத்திருப்பவனுடைய செல்வம், உய்யுந் தன்மை இல்லாமல் அழியும்.

8. பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன் றன்று.

விளக்கம் : பொருளினிடத்தில் பற்றுக் கொள்ளும் உள்ளமாகிய ஈயாத்தன்மை, குற்றம் எதனோடும் சேர்ந்து எண்ணத்தகாத ஒரு தனிக் குற்றமாகும்.

9. வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.

விளக்கம் : எக்காலத்திலும் தன்னை மிக உயர்வாக எண்ணி வியந்து மதிக்கக் கூடாது, நன்மை தராத செயலைத்தான் விரும்பவும் கூடாது.

10. காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்.

விளக்கம் : தன் விருப்பம் பிறர்க்கு தெரியாதபடி விருப்பமான வற்றை நுகர வல்லவனானால், பகைவர் தன்னை வஞ்சிப்பதற்காகச் செய்யும் சூழ்ச்சிகள் பலிக்காமல் போகும்.

1

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share