பொருட்பால் - கூடா நட்பு

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share

1. சீரிடங் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு.

விளக்கம் : மனதார இல்லாமல் வெளியுலகிற்கு நண்பரைப்போல் நடிப்பவரின் நட்பானது, ஒரு கேடு செய்வதற்குச் சரியான சந்தர்ப்பம் கிடைக்கும்போது இரும்பைத் துண்டாக்கத் தாங்கு பலகை போல் இருக்கும் பட்டடைக் கல்லுக்கு ஒப்பாகும்.

2. இனம்போன் றினமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும்.

விளக்கம் : உற்றாராக இல்லாமல் உற்றார்போல நடிப்பவர்களின் நட்பு, மகளிருக்குரிய நற்பண்பு இல்லாமல் அப்பண்பு உள்ளவர் போல நடிக்கும் விலை மகளிரின் மனம்போல உள்ளொன்றும் புறமொன்றுமாக இருக்கும்.

3. பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்
ஆகுதல் மாணார்க் கரிது.

விளக்கம் : அரிய நூல்கள் பலவற்றைக் கற்றிருந்த போதிலும், பகையுணர்வு படைத்தோர் மனம் திருந்தி நடப்பதென்பது அரிதான காரியமாகும்.

4. முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும்.

விளக்கம் : சிரித்துப் பேசி நம்மைச் சீரழிக்க நினைக்கும் வஞ்சகரின் நட்புக்கு அஞ்சி ஒதுங்கிட வேண்டும்.

5. மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்
சொல்லினால் தேறற்பாற் றன்று.

விளக்கம் : மனம் வேறு செயல் வேறாக இருப்பவர்களின் வார்த்தைகளை நம்பி எந்தவொரு தெளிவான முடிவையும் எடுக்க இயலாது.

6. நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும்.

விளக்கம் : பகைவர், நண்பரைப்போல இனிமையாகப் பேசினாலும் அந்தச் சொற்களில் கிடக்கும் சிறுமைக் குணம் வெளிப்பட்டே தீரும்.

7. சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான்.

விளக்கம் : பகைவரிடம் காணப்படும் சொல் வணக்கம் என்பது வில்லின் வணக்கத்தைப் போல் தீங்கு விளைவிக்கக் கூடியது என்பதால், அதனை நம்பக் கூடாது.

8. தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து.

விளக்கம் : பகைவர்கள் வணங்குகின்ற போதுகூட அவர்களின் கைக்குள்ளே கொலைக்கருவி மறைந்திருப்பது போலவே, அவர்கள், கண்ணீர் கொட்டி அழுதிடும் போதும் சதிச்செயலே அவர்களின் நெஞ்சில் நிறைந்திருக்கும்.

9. மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து
நட்பினுட் சாப்புல்லற் பாற்று.

விளக்கம் : வெளித்தோற்றத்திற்கு நண்பரைப்போல் நகைமுகம் காட்டி மகிழ்ந்து, உள்ளுக்குள் பகையுணர்வுடன் இகழ்பவரின் நட்பை, நலிவடையுமாறு செய்திட நாமும் அதே முறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

10. பகைநட்பாங் காலம் வருங்கால் முகநட்
டகநட் பொரீஇ விடல்.

விளக்கம் : பகைவருடன் பழகிடும் காலம் வருமேயானால் அகத்தளவில் இல்லாமல் முகத்தளவில் மட்டும் நட்புச் செய்து பின்னர் நட்பையும் விட்டுவிட வேண்டும்.

1

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share