பொருட்பால் - கேள்வி

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share

1. செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை.

விளக்கம் : கேள்வியால் அடைகின்ற அறிவே செல்வங்களுள் சிறந்த செல்வம் ஆகும்; அந்தக் கேள்விச் செல்வம் பிற செல்வங்களுள் எல்லாம் முதன்மையானதும் ஆகும்.

2. செவிக்குஉணவு இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்.

விளக்கம் : செவிக்கு உணவான கேள்வி இல்லாதபொழுது, உடலைக் காப்பதன் பொருட்டாக வயிற்றுக்கும் சிறிதளவான உணவு அறிவுள்ளவரால் தரப்படும்.

3. செவியுணவிற் கேள்வி உடையார் அவியுணவின்
ஆன்றாரோடு ஒப்பர் நிலத்து.

விளக்கம் : செவியுணவு ஆகிய கேள்வியை உடையவர், இவ்வுலகத்தில் இருப்பவரானாலும், அவியுணவை ஏற்றுக்கொள்ளும் வானுலகத்துத் தேவர்களோடு ஒப்பாவார்கள்.

4. கற்றிலன் ஆயினும் கேட்க அஃதுஒருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை.

விளக்கம் : தான் முயன்று கற்கவில்லை என்றாலும், கற்றவரிடம் கேட்டாவது அறிவு பெறவேண்டும்; அது ஒருவன் தளர்ச்சி அடையும்போது ஊன்றுகோல்போலத் துணையாகும்.

5. இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல்.

விளக்கம் : நல்ல ஒழுக்கம் உடையவரது வாய்ச்சொற்கள், வழுக்கும் சேற்றில் வழுக்காமல் செல்ல உதவும் ஊன்றுகோல்போல ஒருவனுக்கு எப்போதும் உதவியாக விளங்கும்.

6. எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.

விளக்கம் : எவ்வளவு சிறிது என்ற போதும் நல்ல பேச்சுக்களையே கேட்கவேண்டும்; அது அந்த அளவுக்கேனும் சிறந்த பெருமையைக் கேட்டவனுக்குத் தவறாமல் தரும்.

7. பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந்து
ஈண்டிய கேள்வி யவர்.

விளக்கம் : நுட்பமாகக் கற்றுணர்ந்த அறிவோடு கேள்வியறிவும் உடையவர்கள், பிறழ ஒன்றை உணர்ந்தாலும், தமக்குப் பேதைமை தருகின்ற சொற்களைச் சொல்லமாட்டார்கள்.

8. கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி.

விளக்கம் : கேள்வியால் துளைக்கப்படாத செவிகள், பிற ஒலிகளை எல்லாம் கேட்குமாயினும், உண்மையில் செவிடான காதுகளே ஆகும்.

9. செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்.

விளக்கம் : கேள்வியாகிய அறிவுச் சுவையை உணராது, வாயால் அறியும் நாக்கின் சுவையுணர்வு மட்டுமே கொண்டவர்கள் இறந்தாலும் வாழ்ந்தாலும் ஒன்றுதான்.

10. நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது.

விளக்கம் : நுண்மையான கேள்வி அறிவைப் பெறாதவர்கள், தாம் வணக்கமாகப் பேசும் வாயினர் ஆகுதல் அருமையே. கேள்வியறிவு பெற்றவர்கள் பணிவாகவே பேசுவார்கள்.

1

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share