பொருட்பால் - சான்றாண்மை

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share

1. கடனென்ப நல்லவை யெல்லாம் கடனறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.

விளக்கம் : "நமக்கு இது தகுவது" என்று அறிந்து, சான்றாண்மை மேற்கொண்டு ஒழுகுபவர்க்கு, நல்ல குணங்கள் எல்லாம் அவருடைய இயல்பாகவேயிருக்கும் என்பார்கள்.

2. குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத் துள்ளதூஉம் அன்று.

விளக்கம் : சான்றோர்களின் சிறப்பாவது, அவர் குணநலங்களால் வந்த சிறப்பே. அது ஒழிந்த பிற நலன்கள் எல்லாம் எந்நலத்தினும் சேர்வதான ஒரு நலனே ஆகாது.

3. அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோடு
ஐந்துசால் பூன்றிய தூண்.

விளக்கம் : அன்பும், நாணமும், யாவரிடத்தும் ஒப்புரவு செய்தலும், கண்ணோட்டமும், வாய்மையும், சால்பென்னும் பாரத்தைத் தாங்கும் ஐந்து தூண்கள் ஆகும்.

4. கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு.

விளக்கம் : "தவம்" ஓர் உயிரையும் கொல்லாத அறத்தினிடத்தது. சால்பு, பிறரது குற்றத்தை அறிந்தாலும், வெளியே சொல்லித் திரியாத நல்ல குணத்தினிடத்தது.

5. ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை.

விளக்கம் : ஒரு செயலை முடிப்பவரது ஆற்றலாவது, துணையாகுபவரைப் பணிமொழியால் தாழ்ந்தும் கூட்டுக் கொள்ளுதல். சால்புடையார் தம் பகைவரை ஒழிக்கும் படையும் அதுவே.

6. சால்பிற்குக் கட்டளை யாதெனில் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல்.

விளக்கம் : சால்பாகிய பொன்னின் தரத்தை அறிவதற்கான உரைகல், தம்மினும் உயர்ந்தாரிடம் ஏற்கும் தோல்வியை, இழிந்தவரிடமும் ஏற்றுக் கொள்ளுதல் ஆகும்.

7. இன்னசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு.

விளக்கம் : தமக்குத் தீமை செய்தவர்களுக்கும் இனிய செயல்களைச் செய்யாதவரானால், "சால்பு" என்று சிறப்பாகக் கொள்ளப்படுவதுதான் என்ன பயனை உடையதாகுமோ?

8. இன்மை ஒருவற்கு இனிவன்று சால்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின்.

விளக்கம் : "சால்பு உடைமை" என்னும் பண்பு ஒருவனிடம் உறுதி பெற்றிருந்தால், அவனுக்கு வரும் வறுமைத் துன்பங்களும், அவனுக்கு இழிவான நிலைமையைத் தந்துவிடாது.

9. ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி யெனப்படு வார்.

விளக்கம் : சால்புடைமை என்னும் கடலுக்குக் கரை என்று சொல்லப்படும் பெரியோர்கள், ஏனைய கடல்களும் கரையுள் நில்லாமல் காலம் திரிந்தபோதும், தாம் நிலை திரிய மாட்டார்கள்.

10. சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்
தாங்காது மன்னோ பொறை.

விளக்கம் : பல குணங்களாலும் நிறைந்தவரும் தம் தன்மைகளில் குன்றுவார்களானால், இந்தப் பெரிய பூமி தானும் தன் பாரத்தைத் தாங்காததாய் அழிந்து போகும்.

1

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share