காமத்துப்பால் - தகையணங்கு உறுத்தல்

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share

1. அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலுமென் நெஞ்சு.

விளக்கம் : இவ்வடிவம் தேவமகளோ? சிறந்த அழகு மயிலோ? அல்லது கனவிய குழையையுடைய ஒரு மானுடப் பெண்தானோ? புரியாமல் என் நெஞ்சம் மயங்கின்றதே.

2. நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்னது உடைத்து.

விளக்கம் : என்னை அவள் நோக்கினாள். என் பார்வைக்கு எதிராகவும் பார்த்தாள். அந்தப் பார்வை, தானே தாக்கி வருத்தும் அணங்கு, தானையையும் கொண்டதுபோல் உள்ளதே.

3. பண்டறியேன் கூற்றென் பதனை இனிஅறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு.

விளக்கம் : "கூற்று" என்பதை இதன்முன்னர் அறியேன். இப்போது அறிந்து விட்டேன். அது, அழகிய பெண்ணின் வடிவோடு பெரியவாய் அமர்த்த கண்களையும் உடையது.

4. கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண்.

விளக்கம் : தன்னைக் கண்டவரின் உயிரை உண்ணுகின்ற தோற்றத்தோடு, பெண்களில் சிறந்தவளான இந்தப் பேதைக்குக் கண்களும் அமர்த்தனவாக அமைந்து உள்ளனவே.

5. கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கம்இம் மூன்றும் உடைத்து.

விளக்கம் : இளமைப் பருவத்தவளான இவளது பார்வை, வருத்தும் கூற்றமோ? பிறழும் கண்ணோ? மருளும் பிணையோ? இம்மூன்று தன்மையையும் தன்பால் கொண்டிருக்கிறதே.

6. கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்இவள் கண்.

விளக்கம் : வளைவான இவள் புருவங்கள் செம்மையாயிருந்து விலக்கினவானால் அவற்றைக் கடந்து இவள் கண்களும் நாம் நடுங்கும் துயரைச் செய்ய மாட்டாவே.

7. கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்.

விளக்கம் : இந்த மாதின் சாயாத முலைகளின் மேலாக இடப்பட்டுள்ள துகில், அவையும் என்னைக் கொல்லாதபடி காத்தலால் மதகளிற்றின் முகபடாத்தைப் போன்றதாகும்.

8. ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு.

விளக்கம் : போர்க்களத்துக்கு வராதவரும், பிறருக்கு நேர்ந்ததைக் கேட்டு அஞ்சுவதற்கு ஏதுவான என் வலிமையெல்லாம் இவளின் ஒளிவீசும் நெற்றிக்கே உடைந்து போயிற்றே.

9. பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
அணியெவனோ ஏதில தந்து.

விளக்கம் : மானின் பிணைபோன்ற மடநோக்கினையும் உள்ளத்தே நாணத்தையும் உடையவளான இவளுக்கு இவையே சிறந்த அழகாக, வேறும் அணிபூட்டி அழகுபடுத்துதல் ஏனோ?

10. உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று.

விளக்கம் : தன்னை உண்டவருக்கு மகிழ்ச்சியைச் செய்வதல்லாமல் அடப்பட்ட நறாவானது, காமத்தைப் போலக் கண்டவருக்கு மகிழ்வைச் செய்யும் ஆற்றலுடையது இல்லையே.

1

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share