அறத்துப்பால் - தவம்

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share

1. உற்றநோய் நோன்றல் உயிர்க்குஉறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு.

விளக்கம் : தமக்கு வந்த துன்பத்தைப் பொறுத்தலும், பிறவுயிர்க்குத் தாம் துன்பஞ் செய்யாமிருத்தலும் ஆகிய அவ்வளவினதே தவத்திற்கு உள்ளதான வடிவம் ஆகும்.

2. தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம்அதனை
அஃதிலார் மேற்கொள் வது.

விளக்கம் : தவநெறிக்கு ஏற்ற மனவியல்பு கொண்டவர்க்கே தவமும் கைகூடும்: தவப்பயன் இல்லாதவர்கள் அதனைத் தாமும் மேற்கொள்வது வீணான முயற்சியே.

3. துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம்.

விளக்கம் : துறவியர்க்கு உணவு முதலாயின தந்து உறவுகதலின் பொருட்டாகவே, இல்லறத்தார்கள் துறவு நெறியைத் தாம் மேற்கொள்ள மறந்தனர் போலும்.

4. ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்.

விளக்கம் : பொருந்தாத பகைவரைத் தண்டித்தலும், தம்மை விரும்பும் அன்புடையவரை உயர்துதலும் தவ வாழ்வினால் மிகவும் எளிதாக வந்து கைகூடும்.

5. வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்.

விளக்கம் : வேண்டிய பயன்களை வேண்டியபடியே பெறுகின்றதனால், செய்வதற்குரிய தவம் இவ்விடத்திலேயே விரைவாகச் செய்யப்படுவதற்கு உரியதாகும்.

6. தவம்செய்வார் தங்கருமம் செய்வார் மற்றல்லார்
அவம்செய்வார் ஆசையுட் பட்டு.

விளக்கம் : தம் உயிருக்கு நன்மை செய்பவர் தவம் செய்பவரே யாவர். மற்றையோர், ஆசைகளுக்கு உட்பட்டுத் தம் உயிருக்குத் தீமைகளைச் செய்பவர்களே ஆவர்.

7. சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.

விளக்கம் : சுடச்சுட ஒளிவிடும் பொன்னே போல, துன்பம் சுட்டு வருத்த வருத்த, தவஞ்செய்பவருக்கும் உண்மையான அறிவுடைமையானது மேன்மேலும் ஒளிபெற்று வரும்.

8. தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயிர் எல்லாம் தொழும்.

விளக்கம் : தான் என்னும் செருக்கானது தன்னிடமிருந்து நீங்கிய தவ வலிமை பெற்றவனை, உலகத்தில் செறிந்துள்ள உயிர்கள் எல்லாம் தொழுது போற்றும்.

9. கூற்றம் குதித்தாலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு.

விளக்கம் : தவநெறியாலே ஆத்ம வலிமையைப் பெற்ற மகான்களுக்குத் தம்மிடத்தே வருகின்ற கூற்றத்தையும் எதிராக நின்று வெற்றிகொள்வதற்கு முடியும்.

10. இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.

விளக்கம் : உலகில் மெய்யறிவு அற்றவர்கள் பலராகியதன் காரணம், தவம் செய்பவர் சிலராகவும், தவம் செய்யாதவர் பலராகவும் இருப்பதுதான்.

1

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share