1. பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது.
விளக்கம் : நம்மை அள்ளிப் பருகுவர்போல அன்பு காட்டினாலும், நல்ல பண்பில்லாத தீயோரது நட்பானது நாளுக்கு நாள் பெருகுவதை விடக் குறைந்து போவதே இனியது.
2. உறின்நட்டு அறின்ஒரூஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்.
விளக்கம் : செல்வம் உண்டானால் நட்புச் செய்தும், அது போனால் விலகியும் போகின்ற ஒத்த தன்மையில்லாத தீயோரின் நட்பினைப் பெற்றாலும் இழந்தாலும் ஒன்று தான்.
3. உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர்.
விளக்கம் : தாம் அடைவதையே சீர்தூக்கிப் பார்த்திருக்கும் நட்பும், தாம் பெறுவதைக் கொள்ளும் விலைமகளிரும், நம் பொருளைக் களவாடும் கள்வரும், ஒரே தன்மையினரே.
4. அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை.
விளக்கம் : போர்க்களத்தின் இடையில் நண்பரை விட்டுவிட்டுத் தாம் ஓடிப் போய்விடும், கல்லாத விலங்கு போன்றவரின் நட்பை விடத் தனிமையே மிகவும் சிறந்தது.
5. செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று.
விளக்கம் : நமக்குத் துன்பம் வந்தபோது உதவி செய்து காப்பாற்றுவதற்கு வராத சிறுமையாளரது புன்மையான நட்பை அடைதலை விட அடையாததே நன்மையாகும்.
6. பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி யுறும்.
விளக்கம் : பேதையாளனது மிகவும் செறிவான நட்பைக் காட்டிலும் அறிவுடையவர்களின் தொடர்பு இல்லாமல் இருப்பது ஒருவனுக்கு கோடி நன்மை தருவதாக விளங்கும்.
7. நகைவகையர் ஆகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி யுறும்.
விளக்கம் : வெற்றுரை பேசிச் சிரித்து மகிழ்வதற்கு மட்டுமே பயன்படும் தீயோரின் நட்பைக் காட்டிலும், பகைவராலே பத்துக் கோடிக்கும் மேலான நன்மை நமக்குக் கிடைக்கும்.
8. ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்.
விளக்கம் : நம்மாலே செய்து முடிக்கக் கூடிய செயலையும் செய்ய விடாமல் வீண் பொழுது போக்குபவரது நட்பு உறவை மற்றும் அவருடன் பேசுவதைக் கைவிட்டு நீக்கிவிட வேண்டும்.
9. கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு.
விளக்கம் : நம்மாலே செய்து முடிக்கக் கூடிய செயலையும் செய்ய விடாமல் வீண் பொழுது போக்குபவரது நட்பு உறவை மற்றும் அவருடன் பேசுவதைக் கைவிட்டு நீக்கிவிட வேண்டும்.
10. எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
மன்றிற் பழிப்பார் தொடர்பு.
விளக்கம் : வீட்டிலுள்ள போது நட்புரிமை பேசிவிட்டு, பொதுமன்றிலே பழித்துப் பேசுபவரின் தொடர்பு, எந்தச் சிறிய அளவுக்கேனும் நம்மை அடையாதபடி காத்தல் வேண்டும்.
1