பொருட்பால் - தெரிந்து செயல்வகை

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share

1. அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமுஞ் சூழ்ந்து செயல்.

விளக்கம் : எந்த அளவுக்கு நன்மை கிடைக்கும் அல்லது தீமை ஏற்படும் என்று விளைவுகளைக் கணக்குப் பார்த்த பிறதே ஒரு செயலில் இறங்க வேண்டும்.

2. தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்
கரும்பொருள் யாதொன்று மில்.

விளக்கம் : தெளிந்து தேர்ந்த நண்பர்களுடன், சேர்ந்து, ஆற்ற வேண்டிய செயலை ஆராய்ந்து, தாமும் நன்கு சிந்தித்துச் செய்தால் ஆகாதது ஒன்றுமில்லை.

3. ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை
ஊக்கா ரறிவுடை யார்.

விளக்கம் : பெரும் ஆதாயம் கிட்டுமென்று எதிர்பார்த்துக் கை முதலையும் இழந்து விடக்கூடிய காரியத்தை அறிவுடையவர்கள் செய்யமாட்டார்கள்.

4. தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பா டஞ்சு பவர்.

விளக்கம் : களங்கத்துக்குப் பயப்படக் கூடியவர்கள்தான் விளைவுகளை எண்ணிப் பார்த்து அந்தக் களங்கம் தரும் காரியத்தில் இறங்காமல் இருப்பார்கள்.

5. வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோ ராறு.

விளக்கம் : முன்னேற்பாடுகளை முழுமையாக ஆராய்ந்து செய்யாமல் பகைவரை ஒடுக்க முனைவது அந்தப் பகைவரின் வலிமையை நிலையாக வளர்க்கும் வழியாக ஆகிவிடும்.

6. செய்தக்க அல்ல செயக்கெடுஞ் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்.

விளக்கம் : செய்யக் கூடாததைச் செய்வதால் கேடு ஏற்படும்; செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டாலும் கேடு ஏற்படும்.

7. எண்ணித் துணிக கருமந் துணிந்தபின்
எண்ணுவ மென்ப திழுக்கு.

விளக்கம் : நன்றாகச் சிந்தித்த பிறகே செயலில் இறங்க வேண்டும்; இறங்கிய பிறகு சிந்திக்கலாம் என்பது தவறு.

8. ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்.

விளக்கம் : எத்தனை பேர்தான் துணையாக இருந்தாலும் முறையாகச் செய்யப்படாத முயற்சி இறுதியில் முடங்கிப் போய்விடும்.

9. நன்றாற்ற லுள்ளுந் தவறுண் டவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை.

விளக்கம் : ஒருவருடைய இயல்பைப் புரிந்து கொண்டுதான் நன்மையைக் கூடச் செய்ய வேண்டும் இல்லாவிட்டால் அதுவே தீமையாகத் திருப்பித் தாக்கும்.

10. எள்ளாத எண்ணிச் செயல்வேண்டுந் தம்மொடு
கொள்ளாத கொள்ளா துலகு.

விளக்கம் : தம்முடைய நிலைமைக்கு மாறான செயல்களை உயர்ந்தோர் பாராட்டமாட்டார்கள் என்பதால், அவர்கள் பழித்துரைக்காத செயல்களையே செய்திடல் வேண்டும்.

1

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share