பொருட்பால் - நட்பு

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share

1. செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.

விளக்கம் : நட்பைப் போல் ஒருவன் செய்து கொள்வதற்கு அருமையான செயல் எதுவுமே இல்லை. நட்பைப் போல் செயல்களுக்கு அருமையான பாதுகாப்பும் எதுவுமில்லை.

2. நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்நீர பேதையார் நட்பு.

விளக்கம் : நல்ல தன்மையுள்ளவரோடு கொண்ட நட்பானது, வளர்பிறை போல் நாளுக்கு நாள் வளரும். பேதைகளின் நட்பு, தேய்பிறை போல் நாளுக்கு நாள் தேய்ந்து போகும்.

3. நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.

விளக்கம் : நல்ல பண்பு உடையவர்களின் தொடர்பானது, படிக்கப் படிக்க நூலின் நயம் மேன்மேலும் இனிமை தருவது போல், பழகப்பழக மேன்மேலும் இன்பம் தருவதாகும் .

4. நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு.

விளக்கம் : நட்புச் செய்து கொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அன்று. அவர் மிகுதியாகத் தவறு செய்யும் போது அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.

5. புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாம் கிழமை தரும்.

விளக்கம் : நட்புச் செய்வதற்கு ஒருவரோடு ஒருவர் கலந்து பேசிப் பழகுதல் வேண்டியதில்லை. இருவரிடமும் உள்ள ஒத்த உணர்ச்சிகளே நட்பு என்னும் உரிமையைத் தந்துவிடும்.

6. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.

விளக்கம் : உள்ளம் கலக்காமல் முகத் தோற்றத்தில் மகிழ்ச்சி காட்டி நட்புச் செய்வது நல்ல நட்பு ஆகாது. நெஞ்சத்தின் உள்ளேயும் மகிழ்ச்சியோடு நட்புச் செய்வது தான் நல்ல நட்பு.

7. அழிவி நவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.

விளக்கம் : நண்பனுக்கு அழிவு வரும்போது அதை விலக்கி, அவனை நிலைபெறச் செய்து, தன்னையும் மீறிய அழிவின்போது தானும் அவனோடு துயரப்படுவதே நல்ல நட்பாகும்.

8. உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.

விளக்கம் : ஆற்று வெள்ளத்தில் உடையை இழந்தவனது மானத்தை மறைக்க, அவன் கை உடனே உதவுவது போல, நண்பன் துன்பத்தை விரைந்து நீக்குவது தான் நல்ல நட்பு.

9. நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.

விளக்கம் : நட்பு என்பது நிலையாகத் தங்கியிருக்கும் இடம் யாது என்றால், மனமாறுபாடு இல்லாமல் முடிந்த இடமெல்லாம் இணைந்து நின்று காத்து பேணும் நிலையாகும்.

10. இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு.

விளக்கம் : இவர் எமக்கு இப்படிப்பட்டவர், யாம் இவருக்கு இத்தன்மையவர் என்று நட்பின் அளவைச் சொன்னாலும் அந்த நட்பு தன் சிறப்பை இழந்து போகும்.

1

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share