பொருட்பால் - நன்றியில்செல்வம்

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share

1. வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல்.

விளக்கம் : ஒருவன் இடமெல்லாம் நிறைந்த பெரும் பொருளைச் சேர்த்து வைத்து அதை உண்டு நூகராமல் இறந்து போனால் அவன் அந்த பொருளால் செய்ய முடிந்தது ஒன்றுமில்லை.

2. பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும்
மருளானாம் மாணாப் பிறப்பு.

விளக்கம் : பொருளால் எல்லாம் ஆகும் என்று பிறர்க்கு ஒன்றும் கொடுக்காமல் இறுகப்பற்றிய மயக்கத்தால் சிறப்பில்லாத பிறவி உண்டாம்.

3. ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை.

விளக்கம் : சேர்த்து வைப்பதையே விரும்பிப் பற்றுள்ளம் கொண்டு புகழை விரும்பாத மக்கள் பிறந்து வாழ்தல் நிலத்திற்கு பாரமே ஆகும்.

4. எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன்.

விளக்கம் : பிறர்க்கு உதவியாக வாழாதக் காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவன் , தான் இறந்த பிறகு எஞ்சி நிற்பது என்று எதனை எண்ணுவானே.

5. கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடியுண் டாயினும் இல்.

விளக்கம் : பிறர்க்கு கொடுத்து உதவுவதும் தான் நுகர்வதும் இல்லாதவர்க்கு மேன் மேலும் பெருகிய பல கோடிப் பொருள் உண்டானாலும் பயன் இல்லை.

6. ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று
ஈதல் இயல்பிலா தான்.

விளக்கம் : தானும் நுகராமல் தக்கவற்க்கு ஒன்று கொடுத்து உதவும் இயல்பும் இல்லாமல் வாழ்கின்றவன், தன்னிடமுள்ள பெருஞ் செல்வத்திற்கு ஒரு நோய் ஆவான்.

7. அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று.

விளக்கம் : வறியவர்க்கு எதுவும் வழங்கி உதவாதவனுடைய செல்வம், மிகுந்த அழகியொருத்தி், தன்னந்தனியாகவே இருந்து முதுமையடைவதைப் போன்றது.

8. நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று.

விளக்கம் : பிறர்க்கு உதவாத காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவனுடைய செல்வம், ஊர் நடுவில் நச்சு மரம் பழுத்தாற் போன்றது.

9. அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர்.

விளக்கம் : பிறரிடம் செலுத்தும் அன்பையும் விட்டுத் தன்னையும் வருத்தி அறத்தையும் போற்றாமல் சேர்த்து வைத்தப் பெரும் பொருளைப் பெற்று நுகர்பவர் மற்றவரே.

10. சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனையது உடைத்து.

விளக்கம் : புகழ் பொருந்திய செல்வர் உற்ற சிறிய வறுமை உலகத்தைக் காக்க வல்ல மேகம் வறுமை மிகுந்தாற் போன்ற தன்மை உடையது.

1

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share