பொருட்பால் - நல்குரவு

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share

1. இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது.

விளக்கம் : வறுமையைப் போல் துன்பமானது எது என்று கேட்டால், வறுமையைப் போல் துன்பமானது வறுமை ஒன்றே ஆகும்.

2. இன்மை எனவொரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்.

விளக்கம் : வறுமை என்று சொல்லப்படும் பாவி ஒருவனை நெருங்கினால், அவனுக்கு மறுமையின்பமும், இன்மையின்பமும் இல்லாமற் போகும் நிலைமை வரும்.

3. தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குர வென்னும் நசை.

விளக்கம் : வறுமை என்று சொல்லப்படும் ஆசைநிலை ஒருவனைப் பற்றினால், அவனுடைய பழைமையானக் குடிப் பண்பையும் புகழையும் ஒரு சேரக் கெடுக்கும்.

4. இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு தரும்.

விளக்கம் : வறுமை என்பது, நல்ல குடியிற் பிறந்தவரிடத்திலும் இழிவு தரும் சொல் பிறப்பதற்குக் காரணமான சோர்வை உண்டாக்கி விடும்.

5. நல்குர வென்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும்.

விளக்கம் : வறுமை என்று சொல்லப்படும் துன்ப நிலையினுள் பலவகையாக வேறுபட்டுள்ள எல்லாத் துன்பங்களும் சென்று விளைந்திடும்.

6. நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்.

விளக்கம் : நல்ல நூற் பொருளை நன்றாக உணர்ந்து எடுத்துச் சொன்னப் போதிலும் வறியவர் சொன்ன சொற்பொருள் கேட்பார் இல்லாமல் பயன்படாமல் போகும்.

7. அறஞ்சாரா நல்குர வீன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும்.

விளக்கம் : அறத்தோடு பொருந்தாத வறுமை ஒருவனைச் சேர்ந்தால் பெற்றத் தாயாலும் அவன் அயலானைப் போல் புறக்கணித்துப் பார்க்கப்படுவான்.

8. இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு.

விளக்கம் : நேற்றும் கொலை செய்தது போல் துன்புறுத்திய வறுமை இன்றும் என்னிடம் வருமோ, (என்று வறியவன் நாள்தோறும் கலங்கி வருந்துவான்).

9. நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பா டரிது.

விளக்கம் : ஒருவன் நெருப்பினுள் இருந்து தூங்குதலும் முடியும், ஆனால் வறுமை நிலையில் எவ்வகையாலும் கண்மூடித் தூங்குதல் அரிது.

10. துப்புர வில்லார் துவரத் துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று.

விளக்கம் : நுகரும் பொருள் இல்லாத வறியவர் முற்றுந் துறக்க கூடியவராக இருந்தும் துறக்காத காரணம், உப்புக்கும் கஞ்சிக்கும் எமனாக இருப்பதே ஆகும்.

1

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share