பொருட்பால் - நாடு

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share

1. தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வருஞ் சேர்வது நாடு.

விளக்கம் : குறையாத உற்பத்தியைத் தரும் உழைப்பாளர்களும், அற உணர்வு உடையவர்களும், சுயநலம் இல்லாத செல்வரும் சேர்ந்து வாழ்வதே நாடு.

2. பெரும்பொருளாற் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு.

விளக்கம் : மிக்க பொருள் வளம் உடையதாய், எல்லோரும் விரும்பத்தக்கதாய் கேடு இல்லாததாய், மிகுதியாக விளைபொருள் தருவதே நாடாகும்.

3. பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்
கிறையொருங்கு நேர்வது நாடு.

விளக்கம் : போர், இயற்கை அழிவு ஆகியவற்றால் மக்கள் பிற நாடுகளில் இருந்து வந்தால் அந்த பாரத்தையும் தாங்கும்; தன் அரசிற்குத் தான் தரவேண்டிய வரியையும் மகிழ்வோடு தரும்; இதுவே நாடு.

4. உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு.

விளக்கம் : மிக்க பசியும், ஓயாத நோயும் (வெளியே வந்து தாக்கி) அழிவு செய்யும் பகையும் தன்னிடம் சேராமல் நல்ல வகையில் நடைபெறுவதே நாடாகும்.

5. பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லது நாடு.

விளக்கம் : பல வகை மாறுபடும் கூட்டங்களும், உடனிருந்தே அழிவு செய்யும் பகையும், அரசனை வருத்துகின்ற கொலைத் தொழில் பொருந்திய குறுநில மன்னரும் இல்லாதது நாடு.

6. கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
நாடென்ப நாட்டின் தலை.

விளக்கம் : பகைவரால் கெடுதலை அறியாததாய், அறிந்தாலும் வளம் தருவதில் குறையாததாய் இருப்பதையே நாடுகளில் சிறந்தது என்று அறிந்தோர் கூறுவர்.

7. இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற் குறுப்பு.

விளக்கம் : ஊற்றும் மழையும் மாகிய இருவகை நீர்வளமும், தக்கவாறு அமைந்த மலையும் அந்த மலையிலிருந்து ஆறாக வரும் நீர் வளமும் வலிய அரணும் நாட்டிற்கு உறுப்புகளாகும்.

8. பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து.

விளக்கம் : நோயில்லாதிருத்தல், செல்வம், விளை பொருள், வளம், இன்பவாழ்வு, நல்ல காவல் இந்த ஐந்தும் நாட்டிற்கு அழகு என்று கூறுவர்.

9. நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு.

விளக்கம் : முயற்சி செய்து தேடாமலேயே தரும் வளத்தை உடைய நாடுகளைச் சிறந்த நாடுகள் என்று கூறுவர், தேடிமுயன்றால் வளம் தரும் நாடுகள் சிறந்த நாடுகள் அல்ல.

10. ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு.

விளக்கம் : நல்ல அரசன் பொருந்தாத நாடு, மேற்சொன்ன நன்மைகள் எல்லாம் அமைதிருந்த போதிலும் அவற்றால் பயன் இல்லாமல் போகும்.

1

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share