பொருட்பால் - பகைத்திறம் தெரிதல்

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share

1. பகையென்னும் பண்பி லதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற் றன்று.

விளக்கம் : பகை உணர்வு என்பது பண்புக்கு மாறுபாடானது என்பதால் அதனை வேடிக்கை விளையாட்டாகக்கூட ஒருவன் கொள்ளக்கூடாது

2. வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை

விளக்கம் : படைக்கலன்களை உடைய வீரர்களிடம் கூடப் பகை கொள்ளலாம் ஆனால் சொல்லாற்றல் மிக்க அறிஞர் பெருமக்களுடன் பகை கொள்ளக் கூடாது.

3. ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன்.

விளக்கம் : தனியாக நின்று பலரின் பகையைத் தேடிக் கொள்பவனை ஆணவம் பிடித்தவன் என்பதைவிட அறிவிலி என்பதே பொருத்தமாகும்.

4. பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற் றுலகு.

விளக்கம் : பகைவர்களையும் நண்பர்களாகக் கருதிப் பழகுகின்ற பெருந்தன்மையான பண்பை இந்த உலகமே போற்றிப் புகழும்.

5. தன்றுணை இன்றால் பகையிரண்டால் தானொருவன்
இன்றுணையாக் கொள்கவற்றின் ஒன்று.

விளக்கம் : தனது பகைவர்கள் இரு பிரிவினராக இயங்கும் நிலையில் தனக்குத் துணையாக யாருமின்றித் தனியாக இருப்பவர், அந்தப் பகைவர்களில் ஒருவரைத் துணையாகக் கொள்ள வேண்டும்.

6. தேறினுந் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல்.

விளக்கம் : பகைவரைப்பற்றி ஆராய்ந்து தெளிவடைந்திருந்தாலும், இல்லாவிட்டாலும் அதற்கிடையே ஒரு கேடு வரும்போது அந்தப் பகைவருடன் அதிகம் நெருங்காமல் நட்புக் காட்டியும் அவர்களைப் பிரிந்து விடாமலேயே பகை கொண்டும் இருப்பதே நலமாகும்.

7. நோவற்க நொந்த தறியார்க்கு மேவற்க
மென்மை பகைவர் அகத்து.

விளக்கம் : தனது துன்பத்தைப் பற்றி அதனை அறியாமல் இருக்கும் நண்பர்களிடம் சொல்லக்கூடாது தனது பலவீனத்தைப் பகைவரிடம் வெளிப்படுத்திவிடக் கூடாது.

8. வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்கண் பட்ட செருக்கு.

விளக்கம் : வழிவகை உணர்ந்து, தன்னையும் வலிமைப்படுத்திக் கொண்டு, தற்காப்பும் தேடிக் கொண்டவரின் முன்னால் பகையின் ஆணவம் தானாகவே ஒடுங்கி விடும்.

9. இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து.

விளக்கம் : முள்மரத்தை, அது சிறிய கன்றாக இருக்கும்போதே கிள்ளி எறிவது போல, பகையையும், அது முற்றுவதற்கு முன்பே வீழ்த்திட வேண்டும்.

10. உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார்.

விளக்கம் : பகைவரின் ஆணவத்தைக் குலைக்க முடியாதவர்கள், சுவாசிக்கிற காரணத்தினாலேயே, உயிரோடிருப்பதாக நிச்சயமாகச் சொல்ல முடியாது.

1

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share