பொருட்பால் - பெண்வழிச் சேறல்

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share

1. மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்
வேண்டாப் பொருளும் அது.

விளக்கம் : தம் மனையாள் விரும்புகிறபடியே வாழ்கின்றவர், சிறந்த அறப்பயன்களையும் அடையார். பொருள் செய்தலுக்கு முற்படுகின்றவர் இகழ்ந்து ஒதுக்கும் பொருளும் அதுவே.

2. பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணுந் தரும்.

விளக்கம் : தன் ஆண்மையைப் பாணாது, மனையாளது பெண்மையையே விரும்புகிறவன் செல்வம், இவ்வுலகத்து ஆண்பாலர்க்குப் பெரியதோர் நாணமாக வெட்கம் தரும்.

3. இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும்.

விளக்கம் : தன் இல்லாளிடத்தே தாழ்ந்து போவதற்கு ஏதுவான ஒருவனது அச்சம், அது இல்லாத நல்லோர்களிடையே செல்லும் காலத்தில் எப்போதும் நாணத்தையே தரும்.

4. மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்
வினையாண்மை வீறெய்தல் இன்று.

விளக்கம் : தன் மனையாளுக்கு அஞ்சி வாழும் மறுமைப் பயனை இல்லாத ஒருவனுக்கு செயலைச் செய்யும் செயலாண்மை இருந்த போதிலும் அது நல்லோரால் மதிக்கப்படாது.

5. இல்லாளை அஞ்சுவான் அஞ்சும்மற்று எஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல்.

விளக்கம் : தன் மனையாளுக்கு எப்போதும் அஞ்சுகின்றவன், தான் தேடிய பொருளேயானாலும், அதனால் நல்லவர்களுக்கு நல்ல செயல் செய்வதற்கும் அச்சங் கொள்வான்.

6. இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்
அமையார்தோள் அஞ்சு பவர்.

விளக்கம் : தம் இல்லாளின் மூங்கில் போன்ற தோளைக் கண்டதும் அஞ்சுகின்றவர்கள், வீரத்தால் சுவர்க்கம் பெற்ற அமரரைப் போல வாழ்ந்தாரானாலும் ஆண்மையற்றவரே.

7. பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து.

விளக்கம் : தன் இல்லாள் ஏவியபடியே செய்து திரிகின்ற ஒருவனது ஆண் தன்மையைக் காட்டிலும், நாணத்தையுடைய அவளது பெண் தன்மையே மேலானதாகும்.

8. நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
பெட்டாங்கு ஒழுகு பவர்.

விளக்கம் : தம் மனையாள் விரும்பியபடியே நடப்பவர்கள், தம்முடைய நண்பர்களின் குறைகளைத் தீர்க்க மாட்டார்கள். மறுமைக்கு உதவும் எந்த அறத்தையுமே செய்ய மாட்டார்கள்.

9. அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ணேவல் செய்வார்கண் இல்.

விளக்கம் : அறச் செயலும், அது முடிப்பதற்கு ஏதுவான பொருளைச் செய்தலும், பிறவான இன்பச் செயல்களும், தம் மனையாள் ஏவலைச் செய்வாரிடத்தில் உள்ளனவாகா.

10. எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க் கெஞ்ஞான்றும்
பெண்சேர்ந்தாம் பேதைமை இல்.

விளக்கம் : கருமச் சூழ்ச்சிக்கண் சென்ற நெஞ்சமும், அதனால் ஆகிய செல்வமும் உடைய வேந்தர்க்கு, மனையாளைச் சேர்ந்து நடப்பதனால் உண்டாகும் பேதைமை உண்டாகாது.

1

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share