பொருட்பால் - பெரியாரைத் துணைக்கோடல்

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share

1. அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்.

விளக்கம் : அறம் உணர்ந்தவராய்த் தன்னை விட மூத்தவராய் உள்ள அறிவுடையவரின் நட்பை, கொள்ளும் வகை அறிந்து ஆராய்ந்து கொள்ள வேண்டும்.

2. உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.

விளக்கம் : வந்துள்ள துன்பத்தை நீக்கி, இனித் துன்பம் வராதபடி முன்னதாகவே காக்கவல்ல தன்மையுடையவரைப் போற்றி நட்புக் கொள்ள வேண்டும்.

3. அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.

விளக்கம் : பெரியாரைப் போற்றி தமக்குச் சுற்றத்தாராக்கிக் கொள்ளுதல், பெறத்தக்க அரிய பேறுகள் எல்லாவற்றிலும் அருமையானதாகும்.

4. தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை.

விளக்கம் : தம்மைவிட (அறிவு முதலியவற்றால் ) பெரியவர் தமக்குச் சுற்றத்தராகுமாறு நடத்தல், வல்லமை எல்லாவற்றிலும் சிறந்ததாகும்.

5. சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்.

விளக்கம் : தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே உலகம் கண்ணாகக் கொண்டு நடத்தலால், மன்னவனும் அத்தகையாரைக் ஆராய்ந்து நட்புக்கொள்ள வேண்டும்.

6. தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில்.

விளக்கம் : தக்க பெரியாரின் கூட்டத்தில் உள்ளனவாய் நடக்கவல்ல ஒருவனுக்கு,அவனுடைய பகைவர் செய்யக்கூடியத் தீங்கு ஒன்றும் இல்லை.

7. இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே
கெடுக்குந் தகைமை யவர்.

விளக்கம் : கடிந்து அறிவுரைக் கூறவல்ல பெரியாரின் துணை கொண்டு நடப்பவரை கெடுக்கும் ஆற்றல் உள்ளவர் எவர் இருக்கின்றனர்.

8. இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.

விளக்கம் : கடிந்து அறிவுரைக் கூறும் பெரியாரின் துணை இல்லாதக் காவலற்ற அரசன், தன்னைக் கெடுக்ககும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்.

9. முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை.

விளக்கம் : முதல் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லை, அதுபோல் தம்மைத் தாங்கிக் காப்பாற்றும் துணை இல்லாதவர்க்கு நிலைபேறு இல்லை.

10. பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.

விளக்கம் : நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் தேடிக்கொள்வதைவிடப் பத்து மடங்கு தீமை உடையதாகும்.

1

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share