பொருட்பால் - பெருமை

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share

1. ஒளியொருவற்கு உள்ள வெறுக்கை இளியொருவற்கு
அஃதிறந்து வாழ்தும் எனல்.

விளக்கம் : ஒருவனுக்குப் பெருமை, "பிறரால் செய்வதற்கரியதைச் செய்வேன்" என்னும் மனவூக்கமே. இழிவாவது, "அதனைச் செய்யாமலே உயிர்வாழ்வேன்" என்று நினைப்பதாகும்.

2. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.

விளக்கம் : எல்லா மக்களுயிர்க்கும் பிறப்பியல்பு சமமானதே. தொழில் வேறுபாட்டால் பெருமை சிறுமை என்னும் சிறப்பியல்புகள் தாம் ஒருபோதும் ஒத்திருப்பதில்லை.

3. மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்.

விளக்கம் : செயற்கரிய செய்யாத சிறியவர் உயர்ந்த ஆசனங்களிலே வீற்றிருந்தாலும் பெரியவர் ஆகார். அச்செயல்களைச் செய்த பெருமையினர் தரையில் நின்றாலும் சிறியவராகார்.

4. ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு

விளக்கம் : கவராத மனத்தையுடைய மகளிர், நிறையிலே வழுவாமல் தம்மைத் தாமே காத்து ஒழுகுதலைப் போல, பெருமையும் தன்னைத்தான் காப்பவனிடமே உளதாகும்.

5. பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல்.

விளக்கம் : பெருமை உடையவர்கள், தாம் வறுமையானபோதும், பிறரால் செய்வதற்கு அருமையான தம் செயல்களை விடாமல் செய்துமுடிக்கும் வலிமை கொண்டவராவர்.

6. சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
பேணிக்கொள் வேம்என்னும் நோக்கு.

விளக்கம் : "இத்தகையவரான பெரியோரை வழிபட்டு அவரியல்பை நாமும் அடைவோம்" என்னும் நல்ல நோக்கம், மற்றைச் சிறியார் மனத்தில் ஒருபோதும் உண்டாகாது.

7. இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்
சீரல் லவர்கட் படின்.

விளக்கம் : தகுதியான பெரியாரிடம் அமைந்திருக்கும் சிறப்பு, பொருந்தாத சிறியவர்களித்தேயும் சேருமானால், தகுதியைவிட்டுத் தருக்கினிடத்தே அவரைச் செல்லச் செய்யும்.

8. பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து.

விளக்கம் : பெருமை உடையவர் தருக்கியிராமல் பணிவாகவே நடந்து வருவார்கள். மற்றைச் சிறுமை உடையவரோ எப்போதும் தம்மை வியந்து புனைந்து பேசி வருவார்கள்.

9. பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல்.

விளக்கம் : பெருமைக் குணம் ஆவது, காரணம் உள்ளபோதும் தருக்கின்றி அமைந்திருத்தல், சிறுமைக் குணமாவது பெருமை அற்றபோதும் தருக்கி, முடிவில் நின்றுவிடலாகும்.

10. அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்.

விளக்கம் : பெருமை உடையவர், பிறரது மானத்தைப் பேசி, அவமானத்தை மறைப்பார்கள். சிறுமை உடையவரோ, பிறரது குணத்தை மறைத்து, குற்றத்தையே கூறுவார்கள்.

1

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share