அறத்துப்பால் - பொறையுடைமை

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share

1. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

விளக்கம் : தன்மீது குழி பறிப்போரையே தாங்குகின்ற பூமியைப் போல் தம்மை இகழ்ந்து பேசுகிறவர்களின் செயலையும் பொறுத்துக் கொள்வதே தலைசிறந்த பண்பாகும்.

2. பொறுத்த லிறப்பினை யென்றும் அதனை
மறத்த லதனினும் நன்று.

விளக்கம் : அளவுகடந்து செய்யப்பட்ட தீங்கைப் பொறுத்துக் கொள்வதைக் காட்டிலும், அந்தத் தீங்கை அறவே மறந்து விடுவதே சிறந்த பண்பாகும்.

3. இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.

விளக்கம் : வறுமையிலும் கொடிய வறுமை, வந்த விருந்தினரை வரவேற்க முடியாதது அதைப் போல வலிமையிலேயே பெரிய வலிமை அறிவிலிகளின் செயலைப் பொறுத்துக் கொள்வது.

4. நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி யொழுகப் படும்.

விளக்கம் : பொறுமையின் உறைவிடமாக இருப்பவரைத்தான் நிறைவான மனிதர் என்று உலகம் புகழும்.

5. ஒறுத்தாரை யொன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.

விளக்கம் : தமக்கு இழைக்கப்படும் தீமையைப் பொறுத்துக் கொள்பவர்களை உலகத்தார் பொன்னாக மதித்துப் போற்றுவார்கள் பொறுத்துக் கொள்ளாமல் தண்டிப்பவர்களை அதற்கு ஒப்பாகக் கருதமாட்டார்கள்.

6. ஒறுத்தார்க் கொருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.

விளக்கம் : தமக்குக் கேடு செய்தவரை மன்னித்திடாமல் தண்டிப்பவர்க்கு அந்த ஒரு நாள் மட்டுமே இன்பமாக அமையும் மறப்போம் மன்னிப்போம் எனப் பொறுமை கடைப் பிடிப்பபோருக்கோ, வாழ்நாள் முழுதும் புகழ்மிக்கதாக அமையும்.

7. திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்
தறனல்ல செய்யாமை நன்று.

விளக்கம் : பிறர் செய்திடும் இழிவான காரியங்களுக்காகத் துன்பமுற்று வருந்தி, பதிலுக்கு அதே காரியங்களைச் செய்து பழி வாங்காமலிருப்பதுதான் சிறந்த பண்பாகும்.

8. மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந்
தகுதியான் வென்று விடல்.

விளக்கம் : ஆணவங் கொண்டு அநீதி விளைவிப்பவர்களை, நாம் நம் பொறுமைக் குணத்தால் வென்று விடலாம்.

9. துறந்தாரின் தூய்மை யுடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்.

விளக்கம் : எல்லை கடந்து நடந்து கொள்பவர்களின் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்கள் தூய்மையான துறவிகளைப் போன்றவர்கள்.

10. உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொ னோற்பாரிற் பின்.

விளக்கம் : பசி பொறுத்து உண்ணாநோன்பு இருக்கும் உறுதி படைத்தவர்கள்கூடப் பிறர்கூறும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்களுக்கு, அடுத்த நிலையில் தான் வைத்துப் போற்றப்படுவார்கள்.

1

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share