அறத்துப்பால் - வான்சிறப்பு

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share

1. வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று..

விளக்கம் : உரிய காலத்தில் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது; அதனால் மழையே அமிழ்தம் எனலாம்.

2. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.

விளக்கம் : உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.

3. விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.

விளக்கம் : உரிய காலத்தே மழை பெய்யாது பொய்க்குமானால், கடல் சூழ்ந்த இப்பேருலகத்தில் வாழும் உயிர்களைப் பசி வருத்தும்.

4. ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.

விளக்கம் : மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்.

5. கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.

விளக்கம் : பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்.

6. விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.

விளக்கம் : மேகத்திலிருந்து மழைத்துளி விழாது போனால், பசும்புல்லின் நுனியைக்கூட இங்கே காண்பது அரிதாகிவிடும்.

7. நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.

விளக்கம் : பெய்யும் இயல்பிலிருந்து மாறி மேகம் பெய்யாது போனால், நீண்ட கடல் கூட வற்றிப் போகும்.

8. சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.

விளக்கம் : மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது;ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாவும் நடைபெறாது.

9. தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்.

விளக்கம் : மழை பொய்த்துப் போனால், விரிந்த இவ்வுலகத்தில் பிறர்க்குத் தரும் தானம் இராது; தன்னை உயர்த்தும் தவமும் இராது.

10. நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.

விளக்கம் : எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்.

1

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share