அறத்துப்பால் - வாய்மை

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share

1. வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றந்
தீமை யிலாத சொலல்.

விளக்கம் : பிறருக்கு எள்முனையளவு தீமையும் ஏற்படாத ஒரு சொல்லைச் சொல்வதுதான் வாய்மை எனப்படும்.

2. பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்.

விளக்கம் : குற்றமற்ற நன்மையை விளைவிக்கக் கூடுமானால் பொய்யான சொல்லும்கூட வாய்மை என்று கூறத்தக்க இடத்தைப் பெற்றுவிடும்.

3. தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்

விளக்கம் : மனச்சாட்சிக்கு எதிராகப் பொய் சொல்லக்கூடாது; அப்படிச் சொன்னால், சொன்னவரின் மனமே அவரைத் தண்டிக்கும்

4. உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்.

விளக்கம் : மனத்தால்கூடப் பொய்யை நினைக்காமல் வாழ்பவர்கள், மக்கள் மனத்தில் நிலையான இடத்தைப் பெறுவார்கள்.

5. மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை.

விளக்கம் : உதட்டளவில் இன்றி உளமார வாய்மை பேசுகிறவர்கள் தவமும், தானமும் செய்கின்றவர்களைவிட உயர்ந்தவர்களாவார்கள்.

6. பொய்யாமை யன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும்.

விளக்கம் : பொய் இல்லாமல் வாழ்வது போன்ற புகழ் மிக்க வாழ்வு வேறு எதுவுமில்லை; என்றும் நீங்காத அறவழி நலன்களை அளிப்பது அந்த வாழ்வேயாகும்.

7. பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.

விளக்கம் : செய்யக்கூடாததைச் செய்யாததால் விளையும் நன்மையைவிடப் பொய் கூறாத பண்பு பொய்த்துப் போகாமல் கடைப்பிடிக்கும் அறவழி நன்மை தருவதாகும்.

8. புறந்தூய்மை நீரா னமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்.

விளக்கம் : நீரில் குளிப்பதால் உடலின் அழுக்கு மட்டுமே நீங்கும்; மனம் அழுக்குப்படாமல் தூய்மையுடன் விளங்கிட, சொல்லிலும் செயலிலும் வாய்மை வேண்டும்.

9. எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.

விளக்கம் : புறத்தின் இருளைப் போக்கும் விளக்குகளைவிட அகத்தின் இருளைப் போக்கும் பொய்யாமை எனும் விளக்கே ஒருவனை உயர்ந்தோன் எனக் காட்டும் ஒளிமிக்க விளக்காகும்.

10. யாமெய்யாக் கண்டவற்று ளில்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.

விளக்கம் : வாய்மையைப் போல் சிறந்த பண்பு வேறொன்றுமே இல்லை என்பதுதான் ஆராய்ந்து உணரப்பட்ட உண்மையாகும்.

1

Shares
facebook sharing button Share
twitter sharing button Tweet
snapchat sharing button Snap
email sharing button Email
sharethis sharing button Share