இன்னும் ஏழு நாட்கள் தான்

    சிறந்த பக்தராகிய ஏகநாத் அவர்களிடம் தன் நண்பர் வந்து சேர்ந்தார். சுவாமி தாங்கள்தான் எனக்கு அருள்புரிய வேண்டும். பாவம் செய்ய வேண்டாம் என்றுதான் பார்க்கிறேன். ஆனால் என்னையும் அறியாமல் பாவம் செய்து விடுகிறேன்.

    அதைத் தடுக்க தாங்கள் தான் உதவி புரிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஏகநாதர் அந்த நண்பரை பார்த்து, என்ன பாவம் செய்தாலும் நீ இன்னும் ஏழு நாட்களுக்கு மேல் பாவம் செய்யப் போவதில்லை. அதனால் கவலைப்படாதே என்றார்.

    அப்படியென்றால்? உனக்கு ஆயுள் இன்னும் ஏழு நாட்கள்தான் என்று சொல்லவந்தேன் என்றார் ஏகநாத். இதைக் கேட்டு அப்படியே மனம் ஒடிந்து வீடு திரும்பினார் அந்த நண்பர்.

    பகவானே! எனக்கு இன்னும் ஏழு நாட்கள்தான் ஆயுளா? நான் என்ன செய்வேன், என்ன செய்வேன் என்று பகவானைத் தியானம் செய்தபடியே இருந்தார். ஆறு நாட்கள் ஆயின. இந்த ஆறு நாட்களும் தன் நண்பர் பகவானைச் சிந்தனை செய்வதைத் தவிர வேறு ஒரு காரியமும் செய்யவில்லை. ஏழாம் நாள் காலை ஏகநாதர் தன் நண்பரைத் தேடிக் கொண்டு வந்தார்.

1

    எப்படி இருக்கிறாய்? என்று கேட்டார் ஏகநாதர். இன்றுதான் இந்த உலகில் என் கடைசிநாள் ஆகவே கடவுள் ஞாபகமாகத்தான் இருக்கிறேன். அன்று உங்களைப் பார்த்ததிலிருந்து எனக்குக் கடவுள் ஞாபகம்தான். வேறு ஞாபகம் கிடையாது.

    இந்த ஒரு வாரத்தில் எத்தனை பாவங்கள் செய்திருப்பாய்? பாவங்கள் செய்வதாவது? நான் கடவுள் ஞாபகமாகவே இருக்கும்போது எப்படி பாவங்கள் செய்ய முடியும்? பார்த்தாயா! மரணம் சமீபித்துவிட்டது என்று தெரிந்ததும் மனிதனுக்கு எப்படி கடவுள் ஞாபகம் உண்டாகிறது பார்த்தாயா!

    அதற்காகத்தான் இன்னும் ஏழு நாட்கள்தான் இருக்கப்போகிறாய் என்று பயமுறுத்தினேன். எப்பொழுது வேண்டுமானாலும் மரணம் நிகழலாம் என்கிற பயம் மனிதனுக்கு இருந்தால் அவன் ஒரு பாவமும் செய்யமாட்டான் என்றார்.

2

முந்தைய கதை
அடுத்த கதை