ஒரு நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். அவனுக்கு அழகான ஒரு மகள் இருந்தாள். அவளைத் திருமணம் செய்து கொள்ள பலரும் போட்டிப் போட்டனர்.
ஆனால் அரசனோ யார் தன் மகளின் விரலில் இருக்கும் மோதிரத்தை அவளுக்கே தெரியாமல் எடுத்து வந்து தருகிறீரோ, அவருக்கே திருமணம் செய்து வைப்பேன் என்றான்.
இளவரசியின் கையில் இருக்கும் மோதிரத்தை எப்படி எடுப்பது என்று அனைவரும் சிந்தித்தனர். ஆனால் வழி தெரியவில்லை. ஏனெனில் இளவரசி யாரும் பார்க்க முடியாதபடி அரண்மனை அந்தப் புரத்தில் பாதுகாவலுடன் இருந்தாள்.
அந்நாட்டிலிருந்த அழகன் என்ற இளைஞன் எப்படியும் இளவரசியை மணப்பது என்று முடிவு செய்தான். தன் நண்பன் ஒருவனின் உதவியைக் கேட்டான்.
அதற்கு அவன் கவலைப்படாதே நீ உள்ளே மறைந்து கொள்ளக் கூடிய வகையில் பெரிய கடிகாரம் செய்கிறேன்.
1
அரசனும், இளவரசியும் இந்த வழியே வரும்போது நீ கடிகாரத்தினுள் இருந்து இனிய ஓசை எழுப்பு. இளவரசி கடிகாரத்தை வாங்குவாள். உன் எண்ணம் நிறைவேறும் என்றான். இதைக் கேட்டு அழகன் மகிழ்ந்தான்.
சில நாட்களில் கடிகாரம் தயாரானது. வழக்கம்போல அரசனும், இளவரசியும் வருவதை கடிகாரத்தினுள் இருந்தே ஓட்டை வழியாகப் பார்த்தான். உடனே இனிய ஓசை எழுப்பினான். இசையால் கவர்ந்த இளவரசி அவர்கள் நினைத்தபடி அந்தக் கடிகாரத்தை வாங்கினாள்.
நான்கு வீரர்கள் அந்த கடிகாரத்தை தூக்கி கொண்டு சென்று இளவரசியின் அறையில் வைத்தனர். உள்ளிருந்த அழகனும் நேரத்துக்கு தகுந்தபடி ஓசை எழுப்பினான். அதைக் கேட்டுக் கொண்டே இளவரசி தூங்கிவிட்டாள்.
நள்ளிரவு நேரம் கடிகாரத்தை திறந்து கொண்டு வெளியே வந்தான் அழகன். இளவரசியை அறியாமல் அவள் கையில் இருந்த மோதிரத்தைக் கழற்றினான். மீண்டும் கடிகாரத்தினுள் புகுந்து பதுங்கிக் கொண்டான். காலையில் விழித்த இளவரசி கடிகாரம் ஓசை எழுப்பாதது கண்டு வருந்தினாள். அரசனிடம் சென்ற அவள் கடிகாரத்தை சரி செய்ய வேண்டும்.
2
அதை செய்தவனை வரவழையுங்கள் என்றாள். அழகனின் நண்பன் அங்கே வரவழைக்கப் பட்டான். கடிகாரத்தை சோதித்த அவன் இதை என் வீட்டிற்குத் தூக்கி வாருங்கள். நான் சரி செய்து இன்று மாலையே அனுப்பி வைக்கிறேன் என்றான்.
கடிகாரம் வீடு வந்து சேர்ந்தது. அதற்குள் இருந்த அழகன் வெளியே வந்தான். பின்னர் இயந்திரத்தினால் அதே போல ஓசை வரும்படி செய்தான் அவன். மாலையில் வீரர்கள் கடிகாரத்தை அரண்மனைக்கு எடுத்து சென்றனர்.
மறுநாள் அரசனை சந்தித்த அழகன் இளவரசியின் மோதிரத்தை தந்தான். எப்படி இவன் கையில் மோதிரம் கிடைத்திருக்கும் என்று திகைத்தான் அரசன். நடந்ததை அப்படியே சொன்னான் அழகன். அவனின் அறிவைப் பாராட்டி அரசன் அவனுக்கும், இளவரசிக்கும் சிறப்பாகத் திருமணம் செய்து வைத்தார்.
3