ஒரு நாட்டில் கோவிந்தன் என்ற வணிகன் ஒருவன் இருந்தான். கோவிந்தன் செல்வச் செழுமையும், சிறந்த அறிவும்,நல்ல தகுதியும் பெற்றவனாக இருந்தான். மக்களிடமும் அவனுக்கு நன் மதிப்பு இருந்தது.
அந்த நாட்டின் மன்னனிடம் நல்ல செல்வாக்கையும் பேராதரவையும் பெற்ற அவன் மன்னனுடைய கருவூலத்துக்கும் அதிகாரியாக இருந்தான். ஒரு நாள் கோவிந்தன் தன்னுடைய மகள் திருமணத்தை மிகவும் சிறப்பாக நடத்தினான்.
திருமணத்துக்கு மன்னரும், அரசியாரும் முக்கிய விருந்தினராக வந்து சிறப்பித்தனர். கோவிந்தனின் அழைப்பை ஏற்று அரசாங்க அதிகாரி களும், சிப்பந்திகளும், பொதுமக்களும் திருமண விழாவுக்கு திரளாக வந்திருந்தனர். திருமணத்திற்கு வந்திருந்த வர்களில் அரண்மனையைப் பெருக்கிச் சுத்தப்படுத்தும் பணியாளனான ராமசாமி என்பவனும் வந்திருந்தான். அவன் தன்னைப் போன்ற சிப்பந்திகளுக்கென ஒதுக்கபட்ட ஆசனத்தில் அமராமல் அமைச்சர்கள் போன்ற அந்தஸ்து மிக்கவர்களுக்காகப் போடப்
1
பட்டிருந்த ஆசனம் ஒன்றில் சென்று அமர்ந்து கொண்டான். அதைக் கண்ட கோவிந்தன் ராமசாமியிடம் சென்று அவனுக்கு உரிய ஆசனத்தில் சென்று அமருமாறு கேட்டுக் கொண்டான்.
ராமசாமி தான் அமர்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்திருக்க மாட்டேன் என்று வீம்புக்காக அடம் பிடித்தான். நியாயமாகப் பல தடவை சொல்லியும் ராமசாமி கேட்காததால் கோவிந்தன் தன் ஏவலாளரை விட்டு பலாத்காரமாக ஆசனத்தை விட்டுக் கிளப்பி வெளியே துரத்தி விட்டான்.
அந்தக் காட்சியைக் கண்டு திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் கை கொட்டிச் சிரிக்கலானார்கள். ராமசாமிக்கு அவமானமாகப் போய் விட்டது. தன்னைப் பலர் முன்னிலையில் கேவலப்படுத்திய கோவிந்தனை எவ்விதமாவது பழி வாங்கித் தீருவது என்று மனதிற்குள் தீர்மானித்து அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.
திருமண நிகழ்ச்சி நடைபெற்ற மறுநாள் அதிகாலையில் ராமசாமி அரண்மனையைப் பெருக்கி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தான். மன்னரின் படுக்கை அறையைச் சுத்தம் செய்ய வந்தவன் உள்ளே மன்னன் மட்டும் படுக்கையி லிருந்து எழாமல் அரைத் தூக்கத்திலிருப்பதைக் கவனித்தான்.
2
படுக்கையறையின் வெளிப்புறத்தைச் சுத்தம் செய்யும் போது மன்னன் காதில் விழும் வகையில் அவன் கீழ்க்கண்டவாறு முனகிக் கொண்டான்.
"இந்த கோவிந்தனை மன்னர் எவ்வளவு தூரம் நம்பி அரண்மனைக்குள் எங்கு வேண்டுமானானலும் செல்ல அனுமதிக்கிறார். ஆனால் அந்த மூடனோ மன்னருடைய பெருந்தன்மைக்கு இழுக்கு தேடும் விதத்தில் மகாராணியாரை மான பங்கப்படுத்த முயலுகிறான் என்ன கேவலம்".
இந்தச் சொற்கள் மன்னனின் காதில் தெளிவாக விழவே அவன் திடுக்கிட்டு எழுந்து படுக்கையில் உட்கார்ந்து கொண்டு ராமசாமியை அழைத்தான். ராமசாமி வந்து பணிந்து நின்றான். "இப்போது என்ன சொன்னாய்" என்று மன்னன் கேட்டான்.
"எஜமான், நான் ஒன்றும் சொல்லவில்லையே நேற்று இரவு சற்று அதிகமாக மது அருந்தி விட்டேன். இன்னும் சரியாக இயக்கம் தெளிய வில்லை. ஒரு அரைகுறை மது போதையில் ஏதாவது உளறினேனோ என்னவோ.
நான் ஏதாவது தவறாகப் பேசியிருந்தால் எஜமான் மன்னிக்க வேண்டும்" என்று தந்திரமாகக் கூறினான். மன்னர் ராமசாமியை அனுப்பிவிட்டார்.
3
ஆனால் அவன் சொன்ன விஷயங்கள் அவர் மனத்தைக் குடையத் தொடங்கின. அரண்மனையில் எங்கு வேண்டுமானாலும் செல்ல கோவிந்தனுக்கு மன்னர் உரிமை அளித்திருந்தார். ஆகவே அந்தப் புரத்திற்குச் சென்று கோவிந்தன் தமது மனைவியைச் சந்திப்பது கூட சாத்தியந்தான்.
"ஏதோ நடக்காமலா ராமசாமி அந்தத் தகவலை சொல்லியிருக்க முடியும்?" என்று மன்னன் கொதிப்படைந்தான் கோவிந்தன் மீது அவனுக்கு கடுங்கோபம் ஏற்பட்டது. அதே சமயம் தனது மனைவியைப் பற்றியும், அவநம்பிக்கை எண்ணங்கள் அவன் மனதில் அலைமோதத் தொடங்கின.
பெண்களை ஒரு போதும் நம்பக்கூடாது என்று முன்னோர் தெரியாமலா சொல்லி வைத்தார் கள் "பெண்கள் எப்போதும் சஞ்சல சுபாவம் உள்ளவர்கள் தானே". "ஒரு பெண் ஓர் ஆடவனிடம் பேசிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் மற்றொரு ஆடவனைக் கனிவுடன் நோக்குவாள்.
வேள் மனத்திலோ பிறிதோர் ஆடவனுடைய நினைவு இருக்கும். உண்மையில் ஒரு பெண் நிலையாக ஒருவன் மீது மட்டும் அன்பு வைத்திருக் கின்றாள் என்று உறுதியிட்டுக் கூற முடியாது."
4
"கணக்கு வழக்கின்றி விறகைப் போட்டுக் கொண்டிருந்தாலும் நெருப்புக்குத் திருப்தி ஏற்படுவது இல்லை. ஆயிரக் கணக்கில் ஆறுகள் சென்று கடந்தாலும் கடலுக்கு நிறைவு ஏற்படாது. கோடிக்கணக்கில் உயிர்களை அபகரிப்பினும் எமனுடைய மனது நிறைவு பெறுவது இல்லை".
இதே போல் எத்தனை ஆடவர்களிடம் தொடர்பு வைத்துக் கொண்டாலும் பெண்களுக்கு முழுமையான திருப்தி ஏற்படாது போலும்.
"ஒரு பெண் பத்தினியாக இருக்கிறாள் என்றால் தகுந்த ஆடவன் கிடைக்கவில்லை. காலம் ஒத்துழைக்கவில்லை. ஏற்ற சூழ்நிலை அமைய வில்லை என்றுதான் அர்த்தம்."
"தன் மனைவி தன்னை மட்டுமே காதலிக்கிறாள் என்று மனப்பூர்வமாக நம்புகின்ற ஒருவனைப் போல முட்டாள் உலகத்தில் இருக்கவே முடியாது. மன்னர் இவ்வாறெல்லாம் எண்ணியெண்ணி மனம் நொந்து நிம்மதி இழந்தார்.
உடனே தனது காவலர்களை விளித்து இனி கோவிந்தன் அரண்மனைக்கு வந்தால் அவனை உள்ளே பிரவேசிக்க அனுமதிக்காதீர்கள் என்று உத்தரவு போட்டுவிட்டார்.
5
மறுநாள் காலை வழக்கப்படி கோவிந்தன் அரண் மனைக்கு வந்த போது காவலர்கள் அவனை சற்றே அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தி விட்டனர். "என்ன காரணம்?" என்று திடுக்கிட்ட வகையில் கோவிந்தன் கேட்டான். காரணம் எங்களுக்குத் தெரியாது.
உள்ளே அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவு இட்டிருக்கிறார் மன்னர் அவ்வளவுதான். எங்களுக்குத் தெரியும் என்று காவலர்கள் கூறி விட்டனர். என்ன என்று கோவிந்தனுக்கு விளங்கவில்லை.
நாம் என்ன தவறு செய்தோம் என மனக் குழப்பத்தோடு திரும்பத் திரும்ப யோசித்த வண்ணம் அரண்மனை வாசலிலேயே சற்றுநேரம் நின்றான். அப்போது அந்த பக்கமாக வந்த ராமசாமி கோவிந்தனை நோக்கி ஏளனமாக நகைத்து ,ஐயோ பாவம் மன்னர் உங்களை அவமானப்படுத்தி மனம் நோகச் செய்துவிட்டார் போலும். ஆமாம், மனம் வேதனையடையத் தான் செய்யும்.
அன்று திருமண வீட்டிலே பலர் முன்னிலையில் என்னை அவமானப் படுத்திய போது கூட என் மனம் எவ்வளவோ வேதனையடைச் தான் செய்தது. தலை விதியே என்று சகித்துக் கொண்டேன்.
6
நீங்களும் அதே மாதிரி சகித்துக் கொள்ள வேண்டியது தான் என்றான். கோவிந்தனுக்கு இப்போது தான் விஷயம் பளிச்சென விளங்கியது. தன்னைப் பழி வாங்குவதற்காக ராமசாமி திட்டமிட்டு மன்னரிடம் ஏதோ கலகம் மூட்டியிருக்கிறான் என்று யூகித்துக் கொண்டான்.
அப்போது தான் கோவிந்தனுக்குச் சில உலகியல் உண்மைகள் விளங்கின. முட்டாளாக இருந்தாலும், இழி குலத்தில் பிறந்தவனாக இருந்தாலும், கேவலமான வேலை செய்பவனாக இருந்தாலும் அரண்மனையில் பணி புரிபவனை அலட்சியம் செய்யக் கூடாது.
அவனையும் மதித்து அவனுக்கு தக்க மரியாதையைக் கொடுத்தாக வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், மன்னனிடமோ அல்லது அரண்மனையில் உயர்ந்த அதிகாரிகளிடமோ கலகம் மூட்டி பழி வாங்கி விடுவார்கள்.
"ராமசாமியை எவ்விதமாவது சரி கட்டினாலொழிய என் மீது மன்னருக்கு இருக்கும் மனக் கசப்பு மாறாது." இவ்வாறு எண்ணியவாறு கோவிந்தன் தனது இல்லம் சென்றடைந்தான். உடனே தனது பணியாளர்களை அனுப்பி ராமசாமியை அழைத்து வரச் செய்தான்.ராமசாமி வந்ததும் அவனை வரவேற்று உபசரித்து ராமசாமி திருமணத்தன்று உன்னை அவமானப்படுத்தியது
7
தவறு என்று என் மனத்தில் பட்டது. ஆட்களை விட்டு உன்னைத் தேடிக் கொண்டு வரச் சொன்னேன். உன்னைக் கண்டு பிடிக்க முடியவில்லை. நடந்து போனதை மனத்தில் வைத்துக் கொள்ளாதே என்று கூறி கோவிந்தன் உயர்ந்த ஆடை அணிகலன்களும், மற்றும் பொன்னும் பொருளுமாக அன்பளிப்பு தந்து அனுப்பி வைத்தான்.
மறுநாள் காலை ராமசாமி அரண்மனையில் மன்னரின் படுக்கை அறைப் பக்கமாகப் பெருக்கி சுத்தம் செய்து கொண்டிருந்தபோது உள்ளே அறைக்குள் படுக்கையில் இருந்த மன்னர் காதில் விழும் வண்ணம் கீழ்க்கண்டவாறு முனங்கினான்.
"வரவர மன்னரின் நடவடிக்கைகள் சகித்துக் கொள்ளமுடியவில்லை. நேற்று மலம் கழித்துக் கொண்டிருக்கும் அதே சமயம், ஒரு தட்டில் உணவையும் வைத்துக் கொண்டு சாப்பிட்டாரே? என்ன அசிங்கம்."
மன்னரின் செவியில் ராமசாமி சொன்ன சொற்கள் தெளிவாக விழுந்தன. ராமசாமியை அழைத்தார். ராமசாமி அறைக்குள் வந்து அடக்க ஒடுக்கமாக கைகட்டி நின்றான்." இப்போது எதோ சொல்லிக் கொண்டிருந்தாயே, என்ன அது?" என்று கேட்டான். "நான் எதோ சொன்னேனா? அப்படி ஒன்றும் இல்லையே.
8
ஒரு வேளை நேற்று இரவு சற்று அதிகமாக மது அருந்தி விட்டேன். மயக்கம் இன்னும் தெளிய வில்லை. போதை மயக்கத்தில் ஏதாவது உளறினேனோ என்னவோ என்று சாதுரியமாகப் பதிலளித்தான்.
உண்மையிலே மது போதையில் தான் ராமசாமி சற்று முன் உளறிருக்க வேண்டுமென்று மன்னருக்குத் தெளிவாகத் தோன்றியது. அப்படியானால் அன்றொரு நாள் கோவிந்தனைப் பற்றியும் தனது மனைவியைப் பற்றியும் இவன் கூறியது மதுபோதை உளறளாகத் தான் இருக்க வேண்டும் என்று மன்னர் நினைத்தார்.
குடிகாரன் பேச்சை நம்பி அன்பும் பண்பும் மிக்க கோவிந்தனை அவமானப்படுத்தி விட்டோம் என்று மன்னர் வேதனைப்பட்டார். உடனே கோவிந்தனை வரவழைத்து நடந்து போன விஷயங்களைப் பொருட்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டு பழையபடி அவனுக்கு முழு அதிகாரமும் வழங்கி சிறப்பு செய்தார்.
கோவிந்தனும் மகிழ்ச்சியும், மன நிம்மதியும் பெற்று தனது அலுவல்களை வழக்கம் போலக் கவனிக்கத் தொடங்கினான்.
9