ராஜ்யத்தின் எல்லை

    ஜனக மகாராஜான் ராஜ்யத்தில் ஒரு அந்தணன் ஒரு பெரிய தவறு செய்துவிட்டான். அவனைத் தண்டிப்தற்காக ஜனகர் அவனைப்பார்த்து நீர் என் ராஜ்யத்தை விட்டு வெளியே போய்விடும் என்றார்.

    இதைக் கேட்ட அந்தணன், தங்கள் ராஜ்யம் எவ்வளவு தூரம் பரவியிருக்கிறது என்று தெரிவியுங்கள் அது தெரிந்தால் நான் தங்கள் ராஜ்யத்தின் எல்லையைவிட்டு வெளியே செல்வதற்கு செளகரியமாக இருக்கும் என்றான்.

    இதைக் கேட்டதும் ஜனகர் யோசனை செய்ய ஆரம்பித்தார். முதலில் பூமி முழுவதும் தம் அதிகாரம் பரவியிருப்பதாக அவருக்குத் தோன்றியது. பிறகு யோசனை பண்ணிப் பார்த்ததில் தம் அதிகாரம் மிதிலாபுரியில் மாத்திரம்தான் இருப்பதாகத் தோன்றியது.

    இன்னும் யோசனை செய்ததில் தம் அதிகாரம் தம் அரண்மனையில் மட்டும் செல்லுவதாகத் தோன்றிற்று. பிறகு இன்னும் யோசனை பண்ணிப் பார்த்ததில் தம் உடல் மீது மட்டும்தான் தமக்கு அதிகாரம் இருப்பதாக அவருக்குத் தோன்றியது.

1

    இன்னும் யோசனை பண்ணியதில் அந்த உடல் மீதும் அதிகாரம் இருப்பதாக அவருக்குத் தோன்றவில்லை.

    ஆகவே அவர் அந்தணனைப் பார்த்து என் அதிகாரத்திற்கு உட்பட்ட வஸ்து உலகத்தில் ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆகவே நீர் எங்கு வேண்டுமானாலும் உமக்கு இஷ்டப்பட்ட இடத்தில் இருக்கலாம் என்றார்.

    இத்தனை பெரிய ராஜ்யத்தை வைத்துக் கொண்டு தங்களுக்கு யார் மீதும் அதிகாரம் கிடையாது என்று சொல்லுகிறீர்களே எப்படி? என்று அந்தணன் கேட்டான்.

    ஜனகர் தம் மனத்தில் தோன்றிய எண்ணங் களைக் கூறியதும் அந்த அந்தணன் உருமாற, அவன் நின்ற இடத்தில் தரும தேவதை நின்று கொண்டிருந்தது. நான் தரும தேவதை. உன்னைப் பரீட்சிப்பதற்காகத் தான் அந்தணன் வேடம் போட்டுக்கொண்டு வந்தேன். உன்னைப் போல் பிரம்ம நிஷ்டர்களை நான் பார்த்ததில்லை என்று சொல்லிமறைந்தது.

2

முந்தைய கதை
அடுத்த கதை