முன்னொரு சமயம் ஒரு துறவி பணக்காரர் வீட்டில் உணவு உண்டார். பணக்காரர் ஒரு கூஜாவில் அவருக்குக் குடிக்கத் தண்ணீர் வைத்தார். சாப்பாட்டை முடித்துக்கொண்டு துறவி தம் மடம் திரும்பியதும் தம் துணிப்பையில் பணக்காரரின் வெள்ளி கூஜா இருப்பதைக் கண்டு திடுக்கிட்டார்.
நம்மையறியாமல் இக் கூஜாவைத் திருடிக் கொண்டு வந்து விட்டோமோ, இது எப்படி நிகழ்ந்தது என்று கலங்கினார். உடனே பணக்காரர் வீட்டிற்குத் திரும்பிச் சென்று தங்களுக்கு இத்தனை செல்வம் எப்படி வந்தது என்று சொல்ல முடியுமா? என்று கேட்டார்.
அதற்கு அந்தப் பணக்காரர், தங்களைப் போன்ற துறவிகளிடம் சொல்லுவதில் என்ன தவறு? நான் ஒரு காலத்தில் பணம் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டேன். ஒரு நாள் ஒருவர் மணி பர்சை திருட அதில் ஆயிரம் ரூபாய் இருந்தது.
அதை மூலதனமாகக் கொண்டுதான் இத்தனை பொருள் சேர்த்தேன். இருந்தும் அந்தத் திருட்டு என்னை இன்னும் உறுத்திக் கொண்டிருக்கிறது என்று சொன்னார்.
1
உடனே துறவி நீங்கள் திருடிச் சம்பாதித்த பணத்தைக் கொண்டு எனக்கு உணவு அளித்ததால் அந்த உணவை உண்ட எனக்கும் திருட்டுப் புத்தி வந்து விட்டது. இந்தாருங்கள் தங்கள் வெள்ளி கூஜா என்று அதைத் திருப்பிக் கொடுத்தார்.
இதே அனுபவம் பீஷ்மருக்கும் நிகழ்ந்தது. அம்புப் படுக்கையில் படுத்துக் கொண்டு நீதிகள் சொல்லிக் கொண்டிருக்கும் பீஷ்மரைப் பார்த்து திரெளபதி இப்பொழுது இத்தனை நீதிகள் சொல்லுகிறீர்களே அன்று அரச சபையில் துச்சாதனன் என் துகிலைப் பற்றி இழுத்தபோது தங்கள் நீதி எங்கு போயிற்று? என்று கேட்கிறார். அதற்குப் பீஷ்மர் துஷ்டனான துரியோதன் போட்ட சாப்பாட்டைச் சாப்பிட்டு என் புத்தி மழுங்கிருந்தது. இப்பொழுதோ அர்ச்சுனன் அத்தனை ரததத்தையும் என் உடம்பிலிருந்து எடுத்து விட்டான். அதனால் என் புத்தி தெளிவடைந்துள்ளது. அதனால் நீதிகளைச் சொல்ல முடிகிறது என்று சொன்னார்.
2