காந்திமதியின் வீட்டுக் கோழியொன்று அவன் எதிர் வீட்டுக்காரியான மீனாம்பாளின் இல்லத்துக்குள் நுழைந்தது. கோழி உள்ளே நுழைவதைக் காந்தி மதியும் பார்த்துக் கொண்டுதான் இருந்தாள்.
சரி உள்ளே போய்விட்டு வெளியே வந்து விடும் என்று காத்திருந்தாள். ஒரு மணிக்கு மேலாகியும் மீண்டும் கோழி வெளியே வரவே இல்லை. இதனால் சந்தேகம் கொண்ட காந்திமதி தன் எதிர் வீட்டுக்காரியின் வீட்டுக்குச் சென்றாள். கோழியைத் தேடினாள்.
காணமல் போகவே மீனாம்பாள் என் கோழி உன் வீட்டுக்குள் நுழைந்ததே! என்றாள். என் வீட்டிற்குள்ளா? நான் பார்க்கவே இல்லையே! அது வேறு வழியாக வெளியே போயிருக்கும். நன்றாகத் தேடிப்பார் என்று மிக அலட்சியமாகப் பதில் கூறிவிட்டாள் மீனாம்பாள்.
வெளியே எங்கு தேடியும் கோழி கிடைக்க வில்லை. தானாகத் திரும்பும் கோழி அன்று வீட்டிற்கும் திரும்பவில்லை. காந்திமதிக்கு மீனாம் பாளின் மீது சந்தேகம் வலுத்தது.
1
வீட்டுக்குள் வந்த கோழியை மீனாம்பாள்தான் அடித்து, சமைத்து சாப்பிட்டிருப்பாள் என்று அவளுக்குத் தோன்றியது.
மரியாதை ராமனிடம் சென்று புகார் செய்தாள். மரியாதை ராமன் விசாரித்தபோதோ நான் அவள் கோழியைப் பார்க்கவே இல்லை. எனக்கு இது பற்றி ஒன்றும் தெரியாது என்று சத்தியமே செய்தாள் மீனாம்பாள். போதுமான சாட்சியங்கள் இல்லாததால் நான் இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன் என்று மரியாதை ராமன் கூறிவிட்டு அவர்களைப் போகும் படி உத்தரவிட்டார்.
அவர்கள் இருவரும் நீதிமன்றத்தை விட்டு வெளியே சென்று கொண்டிருக்கும்போது அவர்கள் காதில் விழும்படியாக மரியாதை ராமன் தன் உதவியாளரிடம் பின்வருமாறு கூறினார்.
தன் எதிர் வீட்டுக்காரியின் கோழியை அடித்து தின்றுவிட்டு அந்தக் கோழியின் இறகு தன் கொண்டையில் ஒட்டிக் கொண்டிருப்பதையும் மறந்து நின்று பொய் சத்தியம் செய்துவிட்டுப் போகிறாள் பார்த்தாயா? என்று உரக்கவே கூறினார் மரியாதை ராமன்.
2
குற்றமுள்ள மீனாம்பாளின் நெஞ்சம் குறு குறுக்கவே அவள் தன் கொண்டையை திகைப்புடன் தடவிப் பார்த்தாள். இதைக் கவனித்த மரியாதை ராமன் பெண்ணே! நீ எத்தனை பொய் சத்தியம் செய்தாலும், உன் செய்கையே நீ கோழி திருடி என்பதைக் காட்டி விட்டது.
உண்மையை ஒளிக்காமல் கூறு. இல்லாவிட்டால் காவலர்களைக் கொண்டு உன்னைக் கசையடிக் குட்படுத்துவேன் என்று மிரட்டவே அவள் நடுங்கி உண்மையைக் கூறிவிட்டாள். காந்திமதியின் கோழிக்குரிய பணத்தை அவளுக்கு கொடுப்பதுடன் பொய் சொன்னதற்காக அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார் மரியாதை ராமன்.
3